இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிப்படை பொதுத் துறைகள்

இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிப்படை பொதுத் துறைகள்

–பேரா. யுகல் ராயலு

        சமீபத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மானிடைசேஷன் கொள்கை ஒன்றை அறிவித்தார்; அதன்படி முக்கியமான பொதுத் துறை நிறுவனங்கள் பகுதியளவு தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கையளிக்கப்படுகின்றன. புத்திசாலித்தனமாக அமைச்சர் ‘பங்கு விற்பனை’ என்ற வார்த்தையைத் தவிர்த்து விட்டார், ஏனெனில் அது ‘விற்றுத் தலைமூழ்குவது’ என்பதற்குச் சமமானதென மக்கள் உணர்ந்து விட்டார்கள். அழிவேற்படுத்தும் பணமதிப்பிழப்பு சோதனை நடவடிக்கையால் நாடுமுழுதும் உள்ள பற்பல இலட்சம் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் வாழ்வாதாரம் இழந்தனர். இந்நிலையில் மோடி அரசிடமிருந்து ஏதாவது மக்கள் நலனுக்கு ஆதரவான அறிக்கைகள் வராதா என ஏங்கி எதிர்பார்த்திருந்தனர்; அரசின் பெரும் கார்ப்பரேட் குழுமங்களுக்கு ஆதரவான தற்போதைய நடவடிக்கைகளைப் பார்த்த பிறகு பெரும்பான்மையோர் மனமொடிந்து வெறுத்தே போயினர்.

        நாட்டின் பொதுச் சொத்துக்களைப் பணமாக்குதல் என்ற ‘மானிடைசேஷன்’ குறித்துப் பல்வேறு அரங்குகளில் விவாதங்கள் நடைபெறுகின்றன. நிதியமைச்சரின் நடவடிக்கை சரியான திசைவழியில் செல்கிறதா இல்லையா என மக்கள் விவாதிக்கின்றனர். இந்தப் பிரச்சனையின் அடிஆழத்திற்குச் சென்று புரிந்து கொள்ள முயல்வது நல்லது. இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு என்ன? பார்ப்போமா!

தொடக்கம்

        விடுதலை அடைந்தபோது நாட்டின் அடிப்படை கட்டமைப்புகள் வளர்ச்சி பெறாத இளம் மழலைப் பருவத்தில் இருந்தன. பிரிட்டீஷ் ஆட்சி தங்கள் சாம்ராஜ்யத்தின் நிர்வாகத்தை நடத்திச் செல்லப் போதுமான அளவு கட்டமைப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். வளர்ச்சி பெற்ற தபால் மற்றும் தந்தி கட்டமைப்பு, (சரக்குகள் மற்றும் கச்சாப் பொருட்களை ஏற்றிச் செல்லவும்) பிரிட்டீஷ் இராணுவத்தின் நலனுக்குச் சேவை செய்யவும் இரயில்வே வலைப் பின்னல் அமைப்புகளை ஏற்படுத்தினர். ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்காகச் சரக்குப் போக்குவரத்து அமைப்புகள் இந்தியாவில் கட்டப்பட்டன. இவை மக்களுக்கும் பயன்பட்டன (ஆனால் நோக்கம் அதுவல்ல).

        பொருளாதார ரீதியாக இந்தியா வலிமையானதாக இல்லை. பாரம்பரியமான இந்தியாவின் உற்பத்தி முறை என்பது கிராமங்களை அடிப்படையாகக் கொண்டது; காலனிய அரசின் ஆதரவோடு பிரிட்டீஷ் முதலாளிகளின் திட்டங்களால் அவை முற்றாக அழித்தொழிக்கப்பட்டன. இந்தியக் கிராமங்களின் தன்னிறைவு என்பது முடிந்துபோன வரலாறானது. தொழில் புரட்சியும் காலனிய ஆட்சியால் இந்தியாவைக் கடந்து போனது. விடுதலை அடைந்தபோது இந்திய மக்களின் 85சதவீதமானவர்கள் வான்மழையைச் சார்ந்த விவசாயத்தை நம்பி வாழ்வை நடத்தினர். நாட்டின் கல்வி அறிவு வெறும் 12 சதவீதம். மின்சார வசதி நகரங்களில் மட்டுமே என சொற்ப அளவில் இருந்தது.

முதல் சுதந்திர அரசின் பொருளாதாரம்  

        இந்தப் பின்னணியில்தான் பண்டித ஜவகர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமரானார். அவர் ஏற்கனவே சோவியத் சோஷலிச அரசு ஏற்படுத்தி வரும் விரைவான முன்னேற்றத்தால் ஈர்க்கப்பட்டிருந்தார்; எனவே சோஷலிச மாடல் வழிமுறையைப் பகுதியளவு பின்பற்ற முடிவு செய்து அதனை முதலாளித்துவப் பொருளாதாரத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தினார். அவர் தலைமையிலான சுதந்திர இந்தியாவின் முதலாவது அமைச்சரவை கலப்புப் பொருளாதாரத்தைப் பின்பற்ற முடிவு செய்தது. காரணம் அப்பொருளாதாரத் திட்டம் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த சோஷலிஸ்ட்டுகள் மற்றும் கேப்பிடலிஸ்டுகள் இருசாராரையும் சமாதானப்படுத்தி அழைத்துச் செல்வதற்கு வசதியாக இருந்தது.    

கலப்புப் பொருளாதாரத்தின் நோக்கங்கள்

        கலப்புப் பொருளாதாரத்தின் அம்சங்கள் பின்வரும் லட்சியங்களை நோக்கமாக உடையது: அடிப்படை ஆதாரக் கட்டமைப்புகளை உருவாக்கவும் சமூகத்திற்குச் சேவை செய்யவும் பொதுத் துறை; நுகர்வோர் (உற்பத்திப் பொருள்) தேவைகளுக்காகத் தனியார் துறை. மற்றபடி எங்கெல்லாம் சிறப்பாகப் பொருத்தமுடையதோ அங்கெல்லாம் இரண்டும் இணைந்த கூட்டுத்துறை. ‘பொதுத்துறை நிறுவனங்கள் புதிய இந்தியாவின் நவீன ஆலயங்கள்’ என்பது நேருபிரானின் புகழ் வாய்ந்த பொன்மொழி.

பொதுத்துறையின் நோக்கங்கள்

        இரயில்வே, மின்சாரம் எரிசக்தி, போக்குவரத்து, மருத்துவச் சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படையான கட்டமைப்புகளை மேம்படுத்தினால்தான் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும். புதியதாகப் பிறந்த தேசத்தின் வேலைவாய்ப்புகளைப் பெருக்குவது. கஜானாவில் காசின்றி ஆங்கிலேயர் விட்டுச் சென்ற தேச வருமானத்தைப் பெருக்குவது. வளர்ச்சியில் காணப்படும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகள், சமத்துவமின்மையைக் களைவது. முதலீட்டை உற்பத்தி செய்வது. இறக்குமதி / ஏற்றுமதிக்கு உத்வேகம் அளிப்பது. செல்வம் சிலர் கையில் குவிவதைத் தடுத்துப் பரந்த அளவில் செல்வ விநியோகத்தை உறுதி செய்வது. அடுத்த சில பத்தாண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களின் கடுமையான உழைப்பால் புதியதாக விடுதலை அடைந்த தேசத்தின் வளர்ச்சி வேகத்தை அதிகரித்து ஊக்கப்படுத்துவது போன்றவையே நோக்கம்.

        இன்று இரண்டு கோடி மக்கள் பொதுத்துறை நிறுவனங்களில் நேரடி வேலை வாய்ப்பையும், ஏறத்தாழ 8 கோடி மக்கள் பொதுத்துறை இருப்பதால் மறைமுகமாக வாழ்வாதாரம் பெற்றுள்ளனர். என்டிபிசி போன்ற பிரம்மாண்டமான பொதுத்துறை நிறுவனம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கிளை பரப்பி உள்ளது. மலைசாதி இளைஞர்கள் மின்சார உற்பத்தி நிலையங்களில் பணிகளைப் பெற்றுள்ளனர்; பொதுத் துறை இல்லாது இருப்பின், அப்படிப் பணியாற்றுவது அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதது. இந்நிறுவனங்களைச் சார்ந்த துணை நிறுவனங்கள் வளர்ந்தன. பொதுத் துறைகள் நாட்டின் தொலை தூரங்களிலும் அமைந்ததால் குடிசைத் தொழில்கள் உறுதியாக வளர்ந்தன. இவை அனைத்தின் விளைவால் நாட்டின் ஏழ்மை ஓரளவு போக்கப்பட்டது.  

இந்திய இரயில்வே

        இரயில்வே தேசத்தின் உயிரோட்டம் என்பார்கள். 65ஆயிரம் கி.மீ. தொலைவு இருப்புப் பாதையுடன் நம்முடைய வலைப்பின்னல் மூன்றாவது மிகப் பெரிய கட்டமைப்பு. அதில் ஏழாயிரம் பயணிகள் ரயில்கள் நாள்தோறும் இரண்டு கோடி மக்களை அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் சுமந்து செல்கின்றன. தீண்டாமை கொடும் பழக்கத்தை நீக்கும் நிகழ்முறையைத் தொடங்கி வைத்த பெருமை இந்திய இரயில்வேயையே சாரும். 1971ல் இரயில்வே துறையில் 19 லட்சம் ஊழியர்கள் பணியாற்றினர். இன்று அது 11 லட்சமாகக் குறைந்து விட்டது. பல லட்சக் கணக்கான சிறு தொழில் முனைவோர்கள் இரயில்வேயைச் சார்ந்தே தங்கள் தொழில்களை நடத்தி வருகின்றனர்; காரணம், இன்றும் இரயில் பயணம்தான் மக்கள் பலருக்கும்  கட்டுப்படியாகக்கூடிய மிகவும் மலிவான போக்குவரத்து.

        இத்தனை உண்மைகளுக்குப் பிறகும் தற்போதைய ஒன்றிய அரசு நமது இரயில்வேயைத் தனியார்மயப்படுத்த விரும்புகிறது. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வற்புறுத்தல் காரணமாக நம்முடைய அடுத்தடுத்த அரசுகள் இரயில்வே பணிகளை (தெரிந்தே) நீர்க்கச் செய்து வருகின்றன. மெல்ல மெல்ல இரயில்வேயின் சில பகுதிச் செயல்பாடுகள் தனியாரிடம் அளிக்கப்படுகின்றன. இன்று ஏறத்தாழ பாதியளவு இயக்கமல்லாத பணிகள் (non-operating work) ஏற்கனவே தனியார்களிடம் தரப்பட்டதால் இரயில்வே பாதுகாப்பு அம்சங்களில் கடுமையான கவலைகளை உண்டாக்குகிறது.

        இரயில்வே துறை தனியார்மயமாக்கப்பட்டால், இரயில் பயணக் கட்டணங்கள் உயரும். இது நாடுமுழுவதுமுள்ள சிறுவணிகர்கள் வாழ்வுக்கு அடிக்கப்படும் சாவு மணி. கைவினைஞர்கள் தினக்கூலியாக மாறுவார்கள். பொருளாதாரம் மிகவும் எதிர்மறையில் கடும் பாதிப்புக்குள்ளாகும். இன்றைய இரயில்வே “குறைந்த கட்டணத்தில் அதிகப் பயன்பாடு” என்ற இலட்சியக் கொள்கையைப் பின்பற்றுகிறது. இதனால் இரயில்கள் முழுகொள்ளளவுடன் பயணிகளால் நிரம்பி வழிந்து ஓடுகின்றன. இந்நிலையைத் தனியார்மயம் தலைகீழாக மாற்றும். “அதிக கட்டணத்துடன் குறைவான எண்ணிக்கை”யில் இரயில்கள் என்பது புது வேதமாகும். அதிக கட்டணத்தைச் செலுத்தக்கூடிய குறைவான பயணிகளே தனியார் இரயில்களில் பயணம் செய்ய, சாதாரணக் குடிமக்கள் ஏழ்மையிலும் பற்றாக்குறையிலும் தவிக்கவிடப்படுவர். இரயில்கள் மிகத் திறனுடன் வேகமாக ஓடும், ஆனால் துரதிருஷ்டம், பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவை ஓடும்!

நிலக்கரி சுரங்கப் பிரிவு

        இந்திய மக்கள் நிச்சயம் பெருமைப்படலாம், நம் பொதுத்துறை நிறுவனங்களின் ஒன்று ‘கோல் இந்தியா லிட்’ (CIL) உலகின் மிகப் பெரிய நிலக்கரி நிறுவனமாகத் திகழ்கிறது. மொத்தம் 100 பில்லியன் டாலர் (ரூ74ஆயிரம் கோடி) முதலீட்டில் இந்திய நிலக்கரி நிறுவனம் இரண்டாவது பெரிய அமெரிக்கக் கம்பெனியை (வெறும் 9 பில்லியன் டாலர், அதாவது ரூ6,500 கோடி முதலீடு) ஆகச் சிறிதாக்கிவிட்டது. முன்பு இந்திய நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றிய 8 லட்சம் ஊழியர்கள் தற்போது 3 லட்சமாகக் குறைந்து விட்டனர். (இதன் பொருள், அத்தனை லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர் என்பதே.) தனியார் மயமாக்கப்பட்டதற்குப் பிறகு இந்த எண்ணிக்கை மேலும் குறைக்கப்படும்; லாபத்தை அதிகரிக்க நிலக்கரியின் விலை இரண்டு மடங்காகும். இதன் தொடர் விளைவாய் நிலக்கரியைப் பயன்படுத்தி அனல் மின்நிலையங்களின் மின்சார உற்பத்திக்கான செலவுகள் அதிகரிக்க, அதன் சுமை ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் உற்பத்திப் பிரிவின் மீது கூடுதல் சுமையாக இறங்கும்.

நிலக்கரித் துறையும் கடந்த கால அனுபவமும்

        நிலக்கரி தொழிலுடன் தொடர்புடைய ஆர்வத்தைத் தூண்டக் கூடிய பழைய அனுபவம் ஒன்று உண்டு. 60களின் தொடக்கத்தில் இந்திய இரயில்வே நிலக்கரியால் இயக்கப்படும் நீராவி இரயில் என்ஜின்களால் இயக்கப்பட்டன. 1962ம் ஆண்டு இந்தியா – சீனா இடையே யுத்தம் மூள, தனியார் நிலக்கரி உற்பத்தி உரிமையாளர்கள் நிலக்கரி கொள்முதல் விலையை உயர்த்தித் தரும்படி நிர்பந்தம் செய்தனர். அரசு கோரிக்கைக்கு இணங்காதபோது இந்த நிலக்கரி சுரங்க உரிமையாளர்கள் இரயில்வே துறைக்குத் தேவையான நிலக்கரி வழங்க மறுத்து விட்டனர். இதன் விளைவாக, எல்லையில் போரிட்டுவந்த இராணுவத்திற்கான ஆயுதங்கள், போர்க்கருவிகளையும் ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு இரயில்கள் பல நடுவழியில் நின்று தவித்தன. இது இந்திய இராணுவத்தினருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதுடன், இந்திய இராணுவ வீரர்கள் பலர் பலியாகவும் காரணமானது.

        நிலக்கரி பிரிவு தேசியமயமாக்கப்பட்ட தருணத்தில் இந்தக் கடுமையான நிகழ்வும் தேசியமயமாக்குவதற்கான காரணங்களில் ஒன்றாகச் சுட்டிக் காட்டப்பட்டது. தனியார்மயம் குறித்துப் பேசும்போது தற்போதைய அரசு இத்தகைய பிரச்சனைகளை விவாதிக்க விரும்பாது. நிலக்கரி போன்ற கேந்திர முக்கியத்துவமுடைய தேசியச் செல்வாதாரத்தைத் தனியார்மயம் ஆக்குவது இயல்பாகவே தேசத்தின் பாதுகாப்புக்கு எதிரான செயலாகும்.

வங்கிப் பிரிவு

        உலகம் 2007 –08ல் கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டு  உழன்று கொண்டிருந்தபோது இந்தியப் பொருளாதாரம் அதனால் பாதிக்கப்படாமல் இருந்ததற்கு நாட்டின் பொதுத்துறை வங்கிகள் பெருமளவு பாராட்டத்தக்க நெகிழ்வு மற்றும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திறனுடன் விளங்கியதே காரணம். தாராளமயம், தனியார்மயம், உலகமயம் (எல்பிஜி) என்னும் புதிய பொருளாதாரக் கொள்கையின் தீவிர ஆதரவாளரான அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களே உலகப் பொருளாதார நெருக்கடியின்போது இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாத்தது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளே என்ற இந்த உண்மையை அங்கீகரித்துள்ளார்.

        பொதுத்துறை வங்கிகள் பெற்றுள்ள இந்த உறுதியான பெரும் ஆதரவுக்குக் காரணம் அவை அமைக்கப்பட்டதற்கான அடிப்படை கொள்கைகளுடன் செயல்படுவதேயாகும். தனியார் வங்கிகள்போல அவை உயர் லாபம் என்ற கொள்கையில் செயல்படுவன அல்ல. தேசத்திற்கும் சமூகத்திற்கும் சேவையாற்றுவதற்கே செயல்படுகின்றன. வங்கிகள் ஈட்டும் லாபத்தை, மிகக் கூடுதலான வேலைவாய்ப்புகள் என்ற வடிவத்தில் அளித்து, தேசத்தின் கருவூலத்துடன் பகிர்ந்து கொள்கின்றன. குறைந்த லாபத்துடன் செயல்படுவதால், அவை நாடுமுழுவதும் மூலை முடுக்கெல்லாம் கிளைகளைத் திறந்து சமூகத்தின் பெரும்பகுதியினரைச் சென்றடைய இயல்கிறது; அதுதான் அதன் வலிமை.

தேசியமயத்திற்கு முன்பு

        இந்திய வங்கித் தொழில் வரலாறை மேலெழுந்தவாரியாகப் பார்த்தாலே, தேசியமயத்திற்கு முன்பு தனியார் வங்கிப் பிரிவில் நிகழ்ந்த பல தவறுகளை நாம் அறிந்து கொள்ள முடியும். 1969ல் வங்கி தேசியமயத்திற்கு முன்பு அப்பாவியான முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்வில் பெரும் பின்னடைவை ஏற்படுத்திய 1600க்கும் மேற்பட்ட தோல்விகளைத் தனியார் வங்கிகள் ஏற்படுத்தின. தனியார் வங்கி (மூழ்கி) செயல்பாடுகளில் அடைந்த தோல்விகளால் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் அழிவைச் சந்தித்தன. தனியார் வங்கிகளின் மற்றொரு முக்கிய குறைபாடு, கிராமப்புறங்களில் அவை வங்கிச் சேவை வழங்கத் தயங்குவதாகும். கிராமங்களில் ஒருபோதும் தனியார் வங்கிகள் கிளைகளைத் திறப்பதில்லை, திறக்காது.  

தேசியமயத்தின் பயன்கள்

        தேசியமயம், வங்கிச் சேவையை நாட்டின் சாதாரண ஆண்கள் பெண்களோடு இணைத்தது; நாட்டின் குக்கிராமங்களையும் நாடிச் சென்றன. மிக முக்கியமாக வங்கிப் பணிக்கு மரியாதையை ஏற்படுத்தியது. பெற்றோர்கள் தங்கள் மகன்களும் மகள்களும் வங்கியில் பணியாற்றுவதை எதிர்பார்க்கத் தொடங்கினார்கள். இன்று இந்திய மக்களுக்கு மிகுந்த பெருமிதத்துடன் 5 லட்சம் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் வங்கிச் சேவையை வழங்கி வருகிறார்கள். இந்தத் துறையால் ஏராளமான மறைமுக வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மொத்தம் 24 ஆயிரம் கிளைகள், அவற்றில் 8ஆயிரம் கிராமப்புறங்களில் என, அவற்றில் 2,45,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். எண்ணிறைந்த சிறு தொழில் நடத்துவோர்கள் தங்கள் வர்த்தகத்தை நடத்த எஸ்பிஐ அளிக்கும் சிறு கடன் உதவிகளைச் சார்ந்து இருக்கிறார்கள்.

வங்கிப் பிரச்சனைகள்

        சிறு மற்றும் சொந்த தொழில் நடத்தும் வியாபாரிகள் மற்றும் பெண்களுக்குப் பொதுத்துறை வங்கிகள் அளிக்கும் இந்த ஆதரவு நடைமுறையைத் தனியார்மயம் பறித்துவிடும். மிகப் பெரிய தனியார் பிரிவு வங்கியான ஹெசிடிஎஃப்சி வங்கி செயல்பாட்டுடன் இதனை ஒப்பிடலாம். அதன் 5600 கிளைகள் அனைத்தும் நகர்ப்புறங்களிலேயே அமைந்துள்ளன, எந்தக் கிளையும் கிராமப்புறத்தில் இல்லை. அந்த வங்கியிலும் அதிகமான எண்ணிக்கையில் சுமார் 1,16,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

        இன்று வங்கிப் பிரிவு சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனை, ‘செயல்படாத சொத்து’ எனப்படும் அதன் வாராக் கடன் (என்பிஏ). சில கார்ப்பரேட் பெரும் முதலைகள் மிகப் பெரிய தொகையை வங்கிக் கடனாகப் பெற்று, சுமார் 8 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்குக் கடனைத் திரும்பச் செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றன. அவர்கள் ஏமாற்றிய இந்தப் பிரம்மாண்டமான அளவு தொகையைப் பொதுத்துறை வங்கிகள் தாங்கள் ஈட்டிய லாபத்தில் சரிகட்டிக் கொண்டு (கண்டும் காணாமல்) இருக்க வேண்டுமென தற்போதைய ஒன்றிய அரசு விரும்புகிறது.

        தேர்தல் நேரங்களில் இந்தப் பெரும் கார்ப்பரேட் முதலைகள் பூர்ஷ்வா கட்சிகளுக்கு பெரும் தொகையை நன்கொடையாக அளிக்கும். இப்படிக் கொடுத்து வாங்கும் (கள்ள) உறவு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான அரசுக்கும் கடன்களைப் பெற்று பயனடைந்து கடனைத் திரும்பச் செலுத்தாத கடன்காரர்களுக்கும் இடையே நிலவுகிறது. இறுதியில் நட்டமடைவது நாடுதான்.  திருப்பச் செலுத்தப்படாத மோசமான கடனை (bad loans) மீண்டும் வசூல் செய்வதற்கான எந்த நடவடிக்கையையும் முந்தைய மற்றும் தற்போதைய ஒன்றிய அரசுகள் எடுப்பதில்லை.  

        உண்மையில் இந்த ஃபிராடை வெளிக் கொணர்ந்த பெருமை அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளமான ஏஐபிஇஏ பேரியக்கத்தையே சாரும். மிக்கத் துணிவுடன் அந்தச் சங்கம் கடனைத் திரும்பச் செலுத்தாத பெரும் புள்ளிகளின் பட்டியலைப் பொதுமக்கள் அறிவதற்காக வெளியிட்டது; பொது வெளியில் அந்தத் தகவல்களைக் கசியவிடக் கூடாது என ஒன்றிய அரசு வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தை மிரட்டியபோதும், அவர்கள் அந்தத் தேசபக்தக் கடமையை ஆற்றினர். பொதுமக்கள் பணத்தைத் திரும்ப வசூலித்து மீட்பதற்கு வழிமுறைகளைக் காண்பதற்கு வக்கற்ற அரசு வங்கிகள் தனியார்மயம் குறித்துப் பேசுகிறது. அரசுக்குத் தனியார் பிரிவின்பால் அத்தனை மோகம் இருந்தால் கார்ப்பரேட் பிரிவிலுள்ள அவர்களுக்குப் பிரியமான நண்பர்களுக்கு நூற்றுக் கணக்கான புதிய வங்கிக் கிளைகளைத் திறப்பதற்கான லைசென்ஸ்களை வழங்கட்டும். பொதுத்துறை வங்கிகளும் இருக்கட்டும், அவை தேச நலனிற்காகவும், தேசமக்களின் நன்மைக்காகவும் பணி செய்யட்டும்!

மின்சாரம்

        மின் உற்பத்தி தேசியமயமாக்கப்பட்டதன் பிறகுதான் மின்சாரம் கிராமங்களை எட்டிப் பார்த்து சென்று சேர்ந்தது. குக்கிராமங்களுக்கு மின்வசதி வழங்கும் சவாலான பணியை மாநில மின்சாரவாரிய போர்டுகள் ஏற்றன. முன்பு நடைமுறையில் இருந்த தனியார் மின்சார கம்பெனிகள் கிராமப்புறங்களை மின்மயப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. இதைச் சாதித்தது தேசிய தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (NTPC) என்ற பொதுத்துறை நிறுவனம். தனது 55 மின் உற்பத்தி நிலையங்களில் சுமார் 20ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை அளித்து நாட்டின் கஜானாவிற்குச் சுமார் 14ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டித் தந்தது. (அரசுத் துறை என்றால் நட்டம் என்று) பொதுவாக எண்ணப்படுவதற்கு மாறாக என்டிபிசி லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனமாகும். அனைத்து அடிப்படை கட்டுமானங்களையும் ஏற்படுத்தி எப்போது மின்உற்பத்தி லாபகரமாக மாறியதோ அப்போது, பழம் நாடி வரும் வௌவால்கள் போல, தனியார்துறை ஆதரவாளர்கள் தனியார் மின்உற்பத்தியாளர் நலன்களுக்குச் சார்பான நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டனர்.

        மகாராஷ்டிரா மாநிலத்தில் மின் வினியோகம் பகுதியளவு தனியார்மயப்படுத்தப்பட்டது. ஸ்பேன்கோ மற்றும் எஸ்என்டிஎல் என்ற கம்பெனிகளுக்கு 15 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டது. இரண்டு கம்பெனிகளுமே ஐந்தாண்டுகளுக்குள் கடைகளை மூடி நடையைக் கட்டின. ஒப்பந்தம் செய்தபோது ஏற்றுக் கொண்ட கடப்பாடுகள் எதையும் நிறைவேற்றவில்லை. மீண்டும் மின்விநியோகப் பணிகள் ‘மகாராஷ்டிரா மின்விநியோகக் கம்பெனி லிட்’ என்ற அரசுப் பொதுத்துறை நிறுவனத்திற்கே வந்தது. தனியார் கம்பெனிகள் எதுவும் ஒருபோதும் நட்டத்தைச் சந்தித்ததில்லை, அவர்களுடைய லாப இடைவெளி குறைந்தது அவ்வளவுதான்; உடனே மின்கட்டணங்களை உயர்த்தித் தராவிட்டால் தங்கள் பணிகளைச் செய்ய முடியாது என்று மறுத்து விட்டனர். மக்கள் நலன்பால் தனியார்களுக்கு இருக்கும் உறுதிப்பாட்டு உணர்வு அவ்வளவுதான்.

        இறுதியில் மக்களைக் காப்பாற்ற பொதுத்துறை நிறுவனங்கள்தான் வரவேண்டி உள்ளது. (சென்னை பெருமழை வெள்ள பாதிப்பின்போது தொலைபேசி, மின்சாரம் மற்றும் போக்குவரத்து சேவைகளை வழங்கியது அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள்தான் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.) எனவே மின்உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தனியார்மயப்படுத்தும் எந்த நடவடிக்கையும் மின்சாரத்தின் விலையை, பெரும்பாலான இந்தியக் குடும்பங்களின் சக்திக்குக் கட்டுப்படியாகாதபடி, மிக அதிகமாக அதிகரித்துவிடும். வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒரு சேவை பெரும்பாலான நாட்டு மக்களுக்கு கிட்டாததாகிவிடும்!

படைக்கல உற்பத்தி தொழிற்சாலைகள்

        தற்போது இந்தியாவில் 41 ஆர்டனஸ் ஃபாக்ட்ரிகள் உள்ளன; அவை உச்சபட்ச ரகசியத் தன்மையைக் காப்பாற்றி மற்றவர்கள் அறியாதவாறு இந்தியப் பாதுகாப்புக்குத் தேவையான கருவிகளை உற்பத்தி செய்தன. நமது தேசத்தின் வீரம் செறிந்த இராணுவவீரர்கள் எல்லையில் எதிர்கொண்ட பல தாக்குதல்களை எதிர்த்து முறியடிக்க இயன்றதன் பெருமையெல்லாம் நமது சகோதர சகோதரிகள் இந்தத் தொழிற்சாலைகளில் பணியாற்றுவதையே சாரும். ஆண் பெண் தொழிலாளர்கள் அனைவரும் உலகத் தரம் வாய்ந்த படைக்கருவிகள், வெடிமருந்துகளையும் நமது இராணுவத்தினருக்காக இங்கே உற்பத்தி செய்கின்றனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக அனைத்துப் படைக்கல உற்பத்தி தொழிற்சாலைகளும் பரந்து விரிந்த காலி இடங்களின் மையத்தில் அமைக்கப்படுகின்றன. தற்போது சிலர் இந்தக் காலி நிலங்களை தனியார்களுக்கு விற்று ஒன்றிய அரசுக்குப் பணம் ஈட்ட விரும்புகின்றனர்; அப்படித் திரட்டிய விலைமதிக்க முடியாத தேசியச் செல்வாதார வளங்களை அற்பமான காரியங்களுக்கு வீணடிக்கப் போகிறார்கள். (மேலும் கரோனா பெருந்தொற்று பாதிப்பு காலத்தில் மருத்துவத் துறையினருக்குத் தேவையான முழு பாதுகாப்பு ஆடைகள், கையுறைகள், சானிடைசர் போன்றவற்றை இரவு பகலாக ஆர்டனஸ் ஃபாக்டரி ஊழியர்கள் தயாரித்து அளித்தனர்.)

படைக்கல உற்பத்தி தொழிற்சாலைகளைத் தனியார்மயப் படுத்துவதற்கான எந்த முயற்சியும் தேசப் பாதுகாப்போடு விளையாடி அதற்குக் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள்.

நிறைவுரை

       1947 ஆகஸ்ட் மாதம் 14 – 15 தேதிகளின் நள்ளிரவில் பண்டித ஜவகர்லால் நேரு பிரகடனம் செய்தார், “உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியா விழித்தெழுகிறது. விதியோடு நாம் ஓர் ஒப்பந்தம் செய்கிறோம்….” அவர் பேசியது தேசத்தின் அனைத்துக் குடிமக்களின் விதி, எதோ ஒருசில பணக்காரர்களின் விதியைப் பற்றி அல்ல. வளர்ச்சி என்பதன் உண்மையான பொருள் நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும் நல்லதொரு வாழ்வை அமைத்துத் தருவது. 130 கோடி இந்திய மக்களும் எப்போது அமைதியான, கண்ணியமான வாழ்வை வாழ முடிகிறதோ அப்போதுதான் உண்மையான வளர்ச்சி ஏற்பட்டதாகப் பொருள்.

        இந்தியா விடுதலை அடைவதையொட்டி தேசத் தந்தை மகாத்மா காந்தி கூறினார், “ஒவ்வொருவரின் கண்ணீரையும் நாம் துடைப்போம். இந்தப் புதிய விடுதலையின் பயன்களைக் கடைசி வரிசையில் நிற்கும் கடைசி மனிதனும் பெறட்டும்!”. இந்தியக் குடிமக்களின் சிறந்த நலன்களுக்காக நாம் எதிர்காலத் தலைமுறையினருக்கான சிறந்த வேலைவாய்ப்பை (பொதுத் துறை நிறுவனங்களின் மூலம்) ஏற்படுத்தித் தந்தோம். இந்தியப் பொதுத்துறைகளை மேம்படுத்தி வளர்ச்சி பெறச் செய்ததன் காரணமாக மட்டுமே அது சாத்தியமானது; காலங்களின் சோதனைகளை வென்று இந்த மாபெரும் தேசத்தின் வளர்ச்சிக்கு அந்தப் பொதுத்துறை நிறுவனங்கள் மிகச் சிறந்த உறுதியான அடித்தளத்தை அமைத்துத் தந்தன. தேசத்தின் செல்வாதாரம் தேச மக்களுக்குச் சொந்தமானது!

        “நாமிருக்கும் நாடு நமது என்பதறிவோம் – அது

        நமக்கே உரிமையாம் என்பது அறிவோம்!

(நாளும் எங்கள் செல்வம் கொள்ளை போவதைத் தடுத்து நிறுத்துவோம்!

பொதுத்துறைகள் காக்கும் தேச பக்த போராட்டம் –

செப்டம்பர் 27 பாரத் பந்த் – வெற்றிபெறச் செய்வோம்!) பொதுத்துறைகள் காப்போம்! தேசத்தைப் பாதுகாப்போம்!

–நன்றி : நியூஏஜ் (செப். 19 –25)

–தமிழில் : கடலூர் நீலகண்டன்,தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம்