தோழர் ஜெகன் நினைவேந்தல்

தோழர் ஜெகன் 15வது நினைவேந்தல்

            ஜூன் 7 – நமது அருமைத் தலைவர் தோழர் ஜெகன் நம்மைவிட்டு மறைந்த நாள். இவ்வாண்டு ஜூன் 7ல் அவருடைய நினைவேந்தலை மாநிலச் சங்கமும் குடந்தை ஜெகன் கலை இலக்கிய மன்றம் இணைந்து தோழர்கள் வல்லம் தாஜ்பால், காமராஜ், மாநிலத்தலைவர் ஆகீயோர் தலைமையில் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக நமது கூட்டங்கள் பெரும்பான்மை இணைய வழியில்தான் நடக்கின்றன. ஆனால் இந்தக் கூட்டத்தின் சிறப்பு எல்லா கூட்டங்களையும் விஞ்சி இணையத்தில் 100 தோழர்கள் இணைந்திருந்தனர். தோழர்கள் ஆர்.கே. முத்தியாலுநினைவுகளை பகிர்ந்தனர். ஜெகனின் நினைவுகளைப் பகிர்ந்தவர். ஜெகனோடு பழகிய வங்கி ஊழியர் சங்கத் தலைவர், இன்று ஏஐபிஇஏ-வின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் CH வெங்கடாஜலம்.

தோழர் CHV உரையிலிருந்து:

            “மறக்க முடியாத தலைவர்களில் ஒருவர். ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பொருத்தமான தலைப்பு, எப்படி அவரை மறக்க முடியும்? தோழர் ஜெகன் தமிழ்நாட்டிற்குப் பெருமை தேடித் தந்தவர். தொலைபேசி ஊழியர்களோடு மட்டுமல்ல வங்கி ஊழியர்களோடும் நெருங்கிப் பழகியவர். எங்கள் சங்க அலுவலகத்திற்குத் திடீரென்று வருவார். எங்கள் பிரச்சனைகளை ஒரு மாணவர்போலக் கேட்டுத் தெரிந்து கொள்வார். கூட்டங்களில் பேசும்போது மற்ற தோழர்களிடம் செய்திகளைக் கொண்டு சேர்க்கும் துடிப்பு. நம்முடைய சம்பளம், கூலி உயர்வு பிரச்சனைகளில், பேச்சுவார்த்தைகளில் சிறப்பான தலைவர் என்பதைத் தாண்டி அவரிடம் பளிச்சென்று தெரிவது அவரது மனிதநேயம்.

            மற்றொரு மனிதனுக்கு அநியாயம் என்றால் எதிர்க்க வேண்டும் என்று அவருள் கனன்று எழும் கோபம், ஒரு கல்லாவது எறிய வேண்டும் என்பார். (ஒரு பெண் தனக்கு இழைக்கப்படும் கொடுமையை எதிர்த்து தன் நகங்களையாவது ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும் என்று கூறிய காந்தியடிகளின் கோபம் போன்றது). ஆர்ப்பாட்டங்களில் அவர் எழுப்பும் கோஷங்கள் தனித்துவமானவை. மக்கள் பிரச்சனைகள் அனைத்தும் அவரது முழக்கங்களில் இருக்கும். ஒருமுறை அவருடைய கோஷங்களை நாங்கள் சிறு நூலாக அச்சிட்டுக் கொடுத்தோம். எங்களுடைய நீண்ட ஆர்ப்பாட்டங்களில் முன்பு ஏஐபிஇஏ ஜிந்தாபாத் முழக்கம்தான் பெரும்பான்மையாக இருந்ததைத் தோழர் ஜெகனிடமிருந்து கற்ற பிறகுதான் முழக்கங்களில் பிரச்சனைகள் முக்கிய பங்கு வகித்தது. ஒற்றுமை மீது அளவுகடந்த நம்பிக்கை உடையவர், ஒற்றுமைக்காக விட்டுக் கொடுக்கவும் தயங்காதவர். நம்முடைய சக்தி என்ன, வெல்ல முடியுமா என்றெல்லாம் தயங்கி நில்லாது, எப்போதும் இயக்கம் நடத்திக் கொண்டே இருக்க வேண்டும் என வலியுறுத்தியவர்.

            இன்று 100 ஜெகன்கள் வேண்டும், அவர் பாதையில் செயல்பட வேண்டும். நாட்டு நிலைமை அப்படித்தான் உள்ளது. இன்று இந்தியாவில் மோடி அப்படித்தான் ஆட்சி நடத்துகிறார். அநியாயங்கள் தட்டிக் கேட்க முடியாமல் அன்று போராடிய தோழர்கள்கூட இன்று சற்று தளர்வு, சோர்வு என இருக்கிறார்கள். ஆனால் ஜெகனைப் பொருத்தவரை முடியாதது என்ற ஒன்று இல்லை. ஒன்றும் செய்ய முடியாது மோடி வெல்ல முடியாதவர் என்று கட்டமைக்கப்பட்ட பிம்பம் இன்று கலைந்து விட்டது. நடந்து முடிந்த மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் அவரை மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, கேரளாவில் சென்ற முறை வென்ற ஒரு இடத்தையும் இழந்திருக்கிறார்கள்.

            முன்பும் முதலாளித்துவ ஆட்சிதான் இருந்தது. எனினும் மையமான கொள்கையைப் பின்பற்றியது, போராடினால் சற்று இடதுபுறம் வந்தது. ஆனால் இன்று முழுமையான வலதுசாரி ஆட்சி. மோடி அரசின் அராஜகங்களுக்கு விளக்கம் தேவையில்லை. உங்கள் துறையில் விஆர்எஸ் –இல் பார்த்தோம். தோழர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. ஆனாலும் நாம் போராட வேண்டும். அதைத்தான் தோழர் ஜெகனிடம் நாம் கற்க வேண்டும். சமூக ஊடகங்களில் மோடியைக் கிண்டல் செய்வதைப்போல நாடு எந்தத் தலைவரையும் பார்க்கவில்லை. ஆனால் கிண்டல் கேலி மட்டும் போதாது. மக்களிடம் கோபம் கிளர்ந்து எழ, அவர்களைத் தட்டி எழுப்ப வேண்டும். தளர்வு சோர்வு கூடாது எனில் தோழர் ஜெகனை நினைத்துக் கொள்வோம், நமது ஊக்கத்தின் மருந்து அவர். எதாவது செய்ய வேண்டும், அதற்கு ஒற்றுமையைக் கட்ட வேண்டும்.

            எதிர்க்க வேண்டிய அநியாயங்கள் பல. முதலாவது ஏழை — பணக்காரன் ஏற்றத் தாழ்வு வித்தியாசம் முன்பைவிட அதிகரித்துள்ளது. 91–92ல் மன்மோகன்சிங் புதிய பொருளாதாரத்தின் பலன் சில ஆண்டுகளில் பொதுமக்களை (சொட்டு சொட்டாகக் கீழ் இறங்கும் டிரிபிள் டவுன் எக்கானமி மூலம்) அடையும் என்றார். ஆனால் அப்போது வறுமைக் கோட்டிற்குக் கீழே 18 கோடியாக இருந்த மக்கள் தொகை 50 கோடிக்கும் அதிகமானதுதான் கண்ட பலன். முன்பு பணக்காரர்களைக் கோடீஸ்வரர்கள் என்பதுபோய் தற்போது பில்லியனர்கள், ட்டிரில்லியனர்கள் தாண்டி, டாலர் பில்லியனர்கள் என்கிறார்கள். (கரோனா ஊரடங்கின்போதும் அம்பானி அதானிகளின் சொத்து அதிகரிக்கிறது). இந்தியா பின்தங்கிய நாடு, இன்று பல முன்னேற்றங்கள் – ஆனால் அந்த வளர்ச்சி மக்களிடம் இல்லை. கார்ப்ரேஷன் குழாய்களில் தண்ணீர் வருகிறதோ இல்லையோ, வாட்ஸ்அப் ஊடகங்களில் அவ்வளவு தகவல்கள் இதுபற்றி வெளிவருகின்றன.

            அடுத்து பொதுத்துறையைப் பாதுகாக்க, பலப்படுத்த மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும். நான் வங்கியைப் பற்றிச் சொல்லுவேன், நீங்கள் தொலைபேசி பற்றிப் பேசவீர்கள்; ஆனால் தோழர் ஜெகன் எல்லா விஷயங்கள் குறித்தும் பேசுவார். நம்முடைய தோழர்கள் ஒவ்வொருவரும் அப்படித் தயாராக வேண்டும். வங்கி தனியார்மயம் எனில், அது மக்கள் பணம் தனியார் மயமாகிறது என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

            நான்காவது, தொழிலாளர் உரிமைகள், தொழிற்சங்கப் பாதுகாப்பு முக்கியம். இதற்காக நம்முயை முன்னோர்கள் எவ்வளவோ போராட்டங்கள் தியாகங்கள் செய்துள்ளனர். ஐந்தாவது, சமூக நீதி. அது ஆபத்திற்குள்ளாகியுள்ளது. அதனை உயர்த்திப் பிடிக்க ‘தொழிலாளர்களான நாம்தான் முன்னணிப் படை’. இது தோழர் லெனின் நம்மீது வைத்த நம்பிக்கை. ஆறாவது, இன்று இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம், கல்வி எட்டாக்கனியாவது. அடுத்து நாம் பார்த்து வருகிறோம், விவசாயிகள் கடந்த ஆறு மாத காலமாகப் போராடி வருகிறார்கள். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்றவர்கள் அவர்களது கோரிக்கைகளை உதாசீனம் செய்கிறார்கள். முன்பு ஜிடிபியில் விவசாயத்தின் பங்கு 30 சதவீதமாக இருந்தது 10 சதமாகக் குறைந்திருக்கிறது. இந்நிலையில் வருமானத்தை இரண்டு மடங்காக்க முடியாது.

            இவை அனைத்தையும் நாம் பார்த்துக் கொண்டு வருகிறோம். தோழர் ஜெகன் இவை அனைத்தையும் 30, 40 ஆண்டுகளுக்கு முன்பே நம்மிடம் பேசியிருக்கிறார். நாம் கவனத்தில் கொள்ளவில்லை. இப்போது நாம் செயல்படுத்த வேண்டும். அதற்கு நாம் பணியாற்றும் பகுதி என்ற சின்ன வட்டத்திலிருந்து வெளியே வரவேண்டும். இன்று மாறியுள்ள சூழ்நிலையில் நமக்குப் புதிய அணுகுமுறை தேவை, புதிய போராட்ட யுக்திகள் தேவை. இந்த out of box thinking (செக்கு மாட்டு பாதையில் உழல்வதிலிருந்து வெளியே வந்து புதியன சிந்திக்கும் முறை) தோழர் ஜெகனிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது. அதனால்தான் 100 ஜெகன்கள் இன்று வேண்டும் என்கிறோம்.

            ஜெகன் கனவு பெருங்கனவு, அதனை நிறைவேற்ற வேண்டும், தியாகம் செய்ய வேண்டும், அந்தப் பாதையில் நாம் பயணிப்போம்! ஜெகன் எனக்குப் பிடித்த தலைவர், என்னை ஈர்த்த தலைவர். அவரது நினைவுகளைப் பகிர வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி. நாளை நமதே!”

பின்னர் தோழர் விஜய் ஆராக்கியராஜ் தனது பார்வையை முன் வைத்தார். தோழர் நடராஜன், மாநிலசெயலர் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

–உரை தொகுப்பு : நீலகண்டன், கடலூர்