தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்தல் அரசியல் சாசன விரோதமானது

தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்தல்

அரசியல் சாசன விரோதமானது

நீதிபதி V. கோபால கௌடா

ஓய்வு பெற்ற இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி

                கோவிட்-19 கொள்ளை நோய், வரலாறு காணாத மனித நெருக்கடி, பொருளாதார நெருக்கடியை விளைவித்துள்ளது. தேசம் தழுவிய ஊரடங்கால் ஆலைகள், வணிக நிறுவனங்கள் மூடபட்டன; இதன் பாதிப்பைச் சந்திக்க மாநில அரசுகள், தொழிலாளர் சட்டங்களின் வீரியத்தை நீர்த்துப் போகச்செய்யும் அவசரச் சட்டங்களை நாடுகின்றன. சில தொழிலாளர் சட்டங்களிலிருந்து தற்காலிகமாக விலக்களிக்கும் அவசர சட்டம் 2020ஐ உ.பி. அரசு மூன்று ஆண்டு காலத்திற்குப் பிறப்பித்துள்ளது. ஆனால் அதில் சில விதிவிலக்குகள் உண்டு. அவை தொழிலாளர் சட்டங்களில், கொத்தடிமைத் தொழிலாளர் முறை (ஒழிப்பு) சட்டம் 1976, தொழிற்சாலைகள் சட்டம் 1948ன் கீழ் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கான சில ஷரத்துகள், கட்டடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர் (வேலை வாய்ப்பு ஒழுங்குமுறை மற்றும் பணி நிலைமை) சட்டம் 1996 இவைகளுக்கு அவசரச் சட்டத்தில் விலக்கு அளிக்கப்படவில்லை. மேலும் தொழிலாளர்களின் பணி நேரம் ஒரு நாளைக்கு 11 முதல் 12 மணி நேரமாக நீட்டிக்கவும் வகைசெய்யப்பட்டுள்ளது.

            அதுபோலவே மத்திய பிரதேசத்திலும் ம.பி. தொழிலாளர் சட்டங்கள் (திருத்தம்) அவசரச் சட்டம் 2020 கொண்டுவரப்பட்டுள்ளது. இதுபோன்று கர்னாடகா மற்றும் குஜராத் போன்ற பிற மாநில அரசுகளும் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. இந்த நடவடிக்கைகள் குறித்து மாறுபட்ட எதிர்வினை கருத்துகள். பெரிய வணிகக் குழுமங்கள், FICCI போன்ற முதலாளிகளின் கூட்டமைப்புகள் இம்முடிவை வரவேற்றுள்ளன. மிகவும் அடிப்படையான பாதுகாப்பை வழங்க வேண்டிய சட்டங்களைப் பறித்து, முக்கியமாக மாநில அரசுகள் தொழிலாளர்களை நட்டாற்றில் கைவிட்டுவிடுவதால், தொழிற்சங்கங்கள் மற்றும் குடிமைச் சமூகத்தின் பெரும் பிரிவுகள் இம்முடிவைக் கண்டித்துள்ளன.

            நீதிநெறி, கொள்கை சார்ந்த விளைவுகள் ஒருபக்கம் இருக்க, இத்தகைய அவசரச் சட்டங்களின் அரசியலமைப்புச் சட்டப் பின்விளைவுகள் குறித்து ஆராய்வது மிகவும் முக்கியமானது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ)வின் ஸ்தாபக உறுப்பினர் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஐஎல்ஓ-வின் எட்டு கேந்திரமான மாநாட்டு முடிவுகளில் 6 முடிவுகளை ஏற்று, இந்தியா (அமல்படுத்த) ஒப்புதலளித்துள்ளது. அவை கட்டாய உழைப்பு (29வது மாநாட்டுத் தீர்மானம்), சம ஊதியம் (100), கட்டாய உழைப்பு ஒழிப்பு (105), (தொழில்களில் பணியமர்த்தலில்) பாகுபாடு (111), குறைந்தபட்ச வயது நிர்ணயம் (அதாவது, உழைப்பில் ஈடுபடுத்த) (138) மற்றும் குழந்தைத் தொழிலாளர் முறையின் மோசமான வடிவங்கள் (182வது மாநாட்டுத் தீர்மானம்).

            இந்தியா இன்னும் ஒப்புதல் வழங்காத இரண்டு i) சுதந்திரமாகச் சங்கம் அமைத்தல் மற்றும் சங்கம் சேரும் உரிமை (கன்வென்ஷன் தீர்மானம் எண் 87) மற்றும் ii) சங்கம் அமைக்கும் உரிமை மற்றும் கூட்டுபேர உரிமை (தீர்மானம் 98). ஒப்புதல் வழங்காத போதிலும், ஐஎல்ஓ தீர்மானங்கள் இந்தியாவின் தொழிலாளர் நலச்சட்டங்களுக்கு ஆதாரமான வழிகாட்டு நெறிகளாக அமைவதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலையளித்தல் அமைச்சகத்தின் வெளிப்படையான நிலைபாடாக உள்ளது; மேலும் உள்நாட்டு தொழிலாளர் சட்டங்களைச் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தீர்மானங்கள் வகுத்தளித்த உயர்ந்த நெறிகள் மற்றும் உயர்ந்த தரத்திற்குச் சமமாக, பொருந்துவதாகவும் கொண்டு வர இந்திய அரசு கடுமையாக முயற்சிக்கிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

            முத்தரப்பு பேச்சுவார்த்தை (சர்வதேசத் தொழிலாளர் தரம்) கன்வென்ஷன், 1976ஐ இந்தியாவும் ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி ஒப்புதளித்த நாட்டின் அரசு, முதலாளி மற்றும் தொழிலாளர்கள் என்ற முத்தரப்பும் பேச்சுவார்த்தை நிகழ்முறையில் கலந்து கொள்வதே ஐஎல்ஓ தீர்மானத்தின் ஜீவன். மாறாக இந்த அவசரச் சட்டங்கள் எல்லாம், முதல் பார்வையிலேயே மிகத் தெளிவாக ஐஎல்ஓ தீர்மானங்களை மீறுவதாக உள்ளன – உள்நாட்டு தொழிலாளர் சட்டங்கள் எவ்வாறு அமைய விருப்பப்பட வேண்டும் என்பதற்கான உலகளாவி ஒப்புக்கொள்ளப்பட்ட உயர்ந்த அளவுகோலே ஐஎல்ஓ தீர்மானங்கள்.   

            மேலும் இந்த அவசரச் சட்டங்கள் அந்தச் சட்டங்களின் ஷரத்துகளுக்கே முரண்பாடாக உள்ளன. உதாரணத்திற்குத் தொழிற்சாலை சட்டம் 1948ன் அமலாக்கம் இடை நிறுத்தப்பட்டுள்ளது. அப்படி இடைநிறுத்துவதற்கான அதிகாரத்தை அந்தச் சட்டத்தின் 5வது ஷரத்தே வழங்குகிறது: ஒரு ஆலைக்கோ அன்றி ஒருவகைப்பட்ட ஆலைகளுக்கோ தொழிற்சாலை சட்டப் பிரிவு அமலாக்கத்தை நிறுத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு எனினும், அது பொது நெருக்கடிநிலை காரணமாக மட்டுமே பிரயோகப்படுத்தப்பட வேண்டுமென அந்த ஷரத்து கூறுவதையும் மனதில் நிறுத்த வேண்டும். தொழிற்சாலை சட்டத்தைப் பொருத்து எது ’பொது நெருக்கடி’ என்பதும் விளக்கப்பட்டுள்ளது: “நாடு அல்லது நாட்டின் எந்தப் பகுதியிலோ போர், வெளிநாட்டு தாக்குதல் அல்லது உள்நாட்டு குழப்பம் இதன் காரணமாக ஏற்படும் மிகக் கடுமையான நெருக்கடி.” கோவிட்-19 கொள்ளை நோய் பாதிப்பு இதுவரை நவீன உலகம் சந்தித்திராத மிகப்பெரும் அழிவு என்ற போதிலும், தொழிற்சாலை சட்டம் 1948 பயன்பாட்டில் அது, தற்போதைய நிலையில்ஒருபொது நெருக்கடியாகக் கருதப்பட முடியாது.

          அதிகாரம் வழங்கப்பட்ட ஓர் அதிகார அமைப்பு, அந்தச் சட்டத்தை அதில் சொல்லப்பட்டவாறு மட்டுமே பயன்படுத்தவோ அன்றி முற்றிலும் பயன்படுத்தாமலோ இருக்கலாம் என்பதே நன்கு நிறுவப்பட்ட சட்டத்தின் கொள்கை. எனவே இந்த அவசரச் சட்டங்கள் ஒரு தொழிற்சாலையில், தொழிற்சாலைகள் சட்டம் 1948ஐ முடக்குவது என்பதே, அந்தச்சட்டத்தின் ஷரத்து பிரிவு 5ஐ மீறியது, எனவே அப்பட்டமாகச் சட்டவிரோதமான செயல்.

            மற்றொரு முக்கியமான விஷயம், கூட்டாட்சி தத்துவம் என்பதைக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். உ.பி., மற்றும் ம.பி. இரண்டு மாநில அவசரச் சட்டங்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்னும் பெறப்படவில்லை. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது ஷெட்யூல்டு பட்டியல் III-ன்  22 – 24 எண்களில் தொழிலாளர் சட்டங்கள் பதிவாகி உள்ளன. பொதுப்பட்டியலில் இடம்பெறும் விஷயங்களில் எதுவரை மத்திய மாநில அரசுகள் சட்டங்களை இயற்றலாம் என்பதற்கான எல்லை வரையறையை அரசமைப்புச் சட்டப் பிரிவு 254ல் கூறப்பட்டுள்ளது.

            பிரிவு 254(1) கூறுவதாவது: பாராளுமன்றம் சட்டம் இயற்றிய ஒரு விடயத்தில், மாநில அரசு இயற்றும் சட்டம் பொருந்தாது முரண்படும்போது, அந்த விடயத்தில் பாராளுமன்றச் சட்டமே செல்லும், மாநில அரசு சட்டம் செல்லாதாகிவிடும். அந்த விதிக்கு ஒரு விதிவிலக்கை அளிக்கும் பிரிவு 254 (2) கூறுவதாவது : மாநில அரசு சட்டத்தின் பொருத்தப்பாடு இன்மை குறைபாட்டை, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அந்தச் சட்டத்திற்குப் பெறுவதன் மூலம் சரிசெய்யலாம். அப்படி ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, அந்த மாநிலத்தில் மட்டும், மாநில அரசின் அந்தச் சட்டப் பிரிவு செயல் படுத்தப்படும். பொதுப்பட்டியலில் இடம்பெறும் விடயங்களில் மாநில மக்களுக்கு அமல்படுத்த விரும்புவதைச் செய்ய மாநிலங்கள் இவ்வழிமுறையைக் கையாள்கின்றன. ஆனால் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்குவது என்பது, மாநிலம் கேட்பதால் கேட்டவாறு தன்னியக்கமாக வழங்கிவிட, ஒரு சாதாரணமான வெற்று சடங்கு அல்ல என்பதை உச்சநீதிமன்ற அரசமைப்பு பெஞ்ச் [(2002) 8 SCC 182] தீர்ப்பு தெளிவு படுத்தியுள்ளது.

            மேலும், “இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்றுள்ள பிரத்தேகமான கூட்டாட்சி அமைப்பு முறை, (குறிப்பிட்ட மாநிலத்தையும் உள்ளடக்கி) நாடுமுழுவதும் அமலாகும் ஒரு மத்திய சட்டத்தின் ஷரத்துக்கு மாறான ஒன்று ஏன், எதற்கு, என்ன விசேட காரணம் பற்றி, என்ன நோக்கத்திற்காகக் குறிப்பிட்ட அம்மாநிலத்தில் (நாடாளுமன்ற சட்டத்திற்கு மேலதிகமாக) மாநிலச்சட்ட அமலாக்கம் தேவைப்படுகிறதெனக் குடியரசுத் தலைவருக்கு விளக்கவும், அவர் அதனைக் கோரி அறிவதையும் தேவை என்றாக்கி உள்ளது” என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது. இப்படி, மத்திய சட்டத்திற்குப் பொருத்தமில்லாத மாநில சட்டம் அமலாக வேண்டுமானால், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும் முன் விவாதிக்கவும், தனது ஞானத்தைப் பயன்படுத்தவும் முன்நிபந்தனை தேவையாக்கி உள்ளது. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 213 மாநில ஆளுநர்களுக்கு அவசரச்சட்டம் பிறப்பிக்க அதிகாரமளித்தாலும், அந்தச் சட்டப்பிரிவு (1) a,b,cபடி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவைப்படும் விடயங்களில், குடியரசுத் தலைவரின் அறிவுறுத்தல் இல்லாமல், மாநில ஆளுநர் அவசரச்சட்டம் பிரகடனப்படுத்த முடியாது.

            சமீபத்தில் இந்த சட்ட ஷரத்துகள் கூடுதலான கவனத்தை ஈர்த்தன. சில மாநிலங்கள் நிலம் கையகப்படுத்தல் சட்டம் 2013ல் திருத்தங்கள் கொண்டு வந்து, அச்சட்டத்தின் கேந்திரமான, சமூக பாதிப்பைத் தீர்மானித்தல் போன்ற, ஷரத்துகளை நீர்த்துப்போகச் செய்ய முயன்றன. சொத்து கையகப்படுத்தல் பொதுப்பட்டியலின் கீழ் வருகிறது. எனவே குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறாமல் பிறப்பிக்கப்பட்ட மாநில அவசரச் சட்டம் அப்பட்டமான சட்ட விரோதம், அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது, அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பான கூட்டாட்சி தத்துவ அமைப்பு முறையை மதிக்காத செயலாகிறது. தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் அவசரசட்டங்களும் அவ்வாறானதே.

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

தமிழில் : நீலகண்டன்,

         என்எப்டிஇ, கடலூர்