இஎஸ்ஐ_திட்டம்_நீர்த்துப்_போனால், #தொழிலாளர்_நலன்_பாதிக்கும்

இஎஸ்ஐ_திட்டம்_நீர்த்துப்_போனால், #தொழிலாளர்_நலன்_பாதிக்கும்

–டாக்டர் அருண் மித்ரா

            இந்தியாவின் 54 கோடி தொழிலாளர்கள் உற்பத்தியில் ஈடுபட்டு நாட்டு வளர்ச்சிக்காக உழைக்கிறார்கள். என்றாலும் அவர்கள் ஓரம் கட்டப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்.  பெரும்பாலானோர் முறைசாராப் பிரிவுகளில் பணியாற்றுவதால் அவர்களுக்கென எந்தச் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும் இல்லை. அரசு மற்றும் பொதுத்துறைப் பணியாளர்கள் மூன்று சதம் மட்டுமே சமூகப் பாதுகாப்புத் திட்டங்களால் பயன்பெறுகின்றனர். மீதம் இருப்போரில் ஒரு சிறிய பகுதியினர் முறைசார்ந்த பொருளாதார நடவடிக்கைகளில் என்பதால் பெரும்பகுதியினரான 93 சதவீதத் தொழிலாளர்கள் முறைசாராப் பணிகளில்தான் உள்ளனர். அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் தவிர்த்துச் சுமார் 11 சதவீதத்தினர் மட்டுமே சமூகநலத்திட்டங்களின் கீழ் வருகிறார்கள்.

            தொழிலாளர் மாநிலக் காப்புறுதித் திட்டம்  (இஎஸ்ஐ திட்டம்) பன்முகச் சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். திரட்டப்பட்டத் தொழிலாளர்களுக்குச் சமூக, பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. உடல்நலமின்மை, மகப்பேறு, பணியின்போது விபத்துகளால் காயம் மற்றும் உறுப்பு இழத்தல் மேலும் சில துர்மரணங்களின் துயர்களுக்கு எதிராக நிவாரணம் வழங்க வழிவகை செய்கிறது; காப்புறுதி பதிவு செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட தொழிலாளி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சிகிச்சை முதலிய மருத்துவ வசதிகளைச் செய்து தருகிறது.  பணியாற்ற இயலாது உடல்நலமற்ற காலத்தில்  இஎஸ்ஐ சட்டம் 1948-ன் படி முழுமையான மருத்துவ பராமரிப்பு உறுதி செய்யப்பட்டு மீண்டும் பணியாற்ற உடல் ஆரோக்கியம் திரும்பப்பெற வழிவகை செய்கிறது. நோய், மகப்பேறு, பணியின்போது காயம் இவற்றால்  ஏற்படும் ஊதிய இழப்புக்கு (ஊதியத்துடன் விடுமுறை போன்ற) நிவாரணம் வழங்குகிறது.

            இஎஸ்ஐ திட்டம் ஏனையக் காப்புறுதி இன்ஷுரன்ஸ் திட்டங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அது வெறும் மருத்துவக் காப்புறுதி மட்டுமல்ல, ஓய்வுக்காலப் பலன், நோய் மற்றும் ( உறுப்பிழத்தல் போன்ற) இயலாது போகும் நிலைகளில் உதவி, சார்ந்திருப்போருக்கு பலன், பேறுகால வசதி, உள்பிரிவு நோயாளிக்கானச் செலவுத் தொகை, ஈமக்கடன் செலவு, வேலையில்லா காலத்திற்கான சலுகைகள், மறுவாழ்வுப் பயிற்சிச் செலவுகள் எனப் பலவும் இதில் அடங்கும். குறிப்பாக உட்பிரிவு நோயாளியாக அனுமதிக்கப்படும் வரை, வெளிப்புற நோயாளியாகப் பெறுகின்ற சிகிச்சைக்கானச் செலவுத் தொகையையும் இஎஸ்ஐ திட்டம் பொறுப்பேற்பது போல ஏனைய காப்பீட்டுத் திட்டங்களில் இல்லை.

            இஎஸ்ஐ ஒரு முன்னுதாரணமான வழிகாட்டும் திட்டம். இதில் அரசு நேரடியாக பலநிலைகளில் நலவாழ்வை உறுதிசெய்ய முடியும்.  ’மருத்துவ இன்ஷூரஸ்’ திட்டத்திற்கும் இந்த ’இஎஸ்ஐ சமூகப் பாதுகாப்புக் காப்புறுதி’ திட்டத்திற்குமிடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளளாத மத்திய அரசு சில வேண்டாத ஆலோசனைகளைக் கேட்டு இந்தத் திட்டத்தில் ’சீர்திருத்த’ மாற்றங்களை மேற்கொள்ள எண்ணியுள்ளது துரதிருஷ்டவசமானது.

            தொழிலாளர் ஊதிய விகிதத்தில், 4.75 சதவீதத்திற்குச் சமமான தொகையைப் பணி அமர்த்துபவர் செலுத்த, தொழிலாளரும்  ஊதியத்தில் 1.75 சதவீதம் தனது பங்கு சந்தாவாகச் செலுத்தும் தொகையின் மூலமாகத் திட்டத்தைச் செயல்படுத்துவது என்பதே இஎஸ்ஐ யின் அடிப்படை.  2019 ஜூலை முதல் தேதி முதல் இந்தச் சந்தா பங்கு விகிதத்தை முதலாளிக்கு 3.25 சதமாகவும் தொழிலாளிக்கு 0.75 சதமாகவும் குறைக்க மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.  இந்த மாற்றம் செய்வதற்கான தர்க்க வாதமாக அமைச்சகம் முன்வைப்பது, இந்தத் தலைப்பின் கீழ் பெருமளவில் நிதி குவிந்து இருப்பில் சேர்ந்து விட்டது என்பதே.  ஆனால் இதனை உண்மைகளின் அடிப்படையில் ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?  

            2014 முதல் 2019 வரை, குறிப்பிடப்படாத நிதி இருப்பு 2013 மார்ச் மாதத்தில் 15,650 கோடியிலிருந்து 2019 மார்ச் மாதத்தில் ரூ68,292 கோடியாக உயர்ந்து விட்டது. (இந்த நிதியைக் கொண்டுதான் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளைத் துவங்கியது என்பது கூடுதல் தகவல்).  இந்த நிதி இருப்பு இந்தக் காலக்கட்டத்தில் அதிகரிக்கக் காரணம் ரூ15 ஆயிரம் ஊதியம் பெறுபவர்கள் மட்டுமே இஎஸ்ஐ திட்டத்தில் சேரமுடியும் என்ற வரையறை ரூ 21 ஆயிரம் ஊதியம் பெறுபவர்களும் சேரலாமென 2017 ஜனவரியில் மாற்றப்பட்டதுதான்.  இதனால் இஎஸ்ஐ பதிவு பெற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை கூடியது, அதே போல (உயர் ஊதிய சம்பள விகிதத்திற்கு ஏற்ப) சந்தா தொகையும் அதிகரித்தது.  தொழிலாளர் நலனுக்காக அரசு செலவழித்த தொகையைக் குறைத்துவிட்டதும் மற்றொரு காரணம் ஆகும்.

            2014-ம் ஆண்டு பல மாற்றங்கள் செய்யப்பட்டன. இதனால் இஎஸ்ஐ திட்டப் பயன்களின் பெரும்பாலானவை கிட்டாதாயின, குறிப்பாக உயர்மிகு சிறப்பு மருத்துவம் (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) பெறுவது தடுக்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாகவும்  செலவுத் தொகை அதிகம் குறைந்து விட்டது. திட்டத்தில் சேர்ந்த மூன்று மாதங்களில் மருத்துவ வசதி பெறுவது என்பது இரண்டாண்டு குறைந்தபட்சத் தகுதி என நிர்ணயிக்கப்பட்டதால், அந்தக் காலம் வரை குடும்ப உறுப்பினர்களுக்கும் சிறப்பு மருத்துவ வசதி பெறமுடியாத நிலை.

            மற்றொரு உண்மை, 2017 முதல் 2018 வரை காப்புறுதி பதிவு பெற்றத் தொழிலாளர்கள் 1 கோடியே 95 லட்சம் என்பதிலிருந்து 3 கோடியே 11 லட்சம் பேர் அதாவது, 59.5 சதவீதத் தொழிலாளர்கள் என எண்ணிக்கை உயர்ந்தது. இதே காலகட்டத்தில் மருத்துவ மனைகளின் எண்ணிக்கையோ 1418 என்பதிலிருந்து 1500 என வெறும் 5.7 சதம் மட்டுமே அதிகரித்தது.  இதனாலும் இஎஸ்ஐ சந்தா தொகையாகப் பெற்ற நிதியம் குறை—பயன்பாட்டு அளவே பயன்படுத்தப்பட்டது.  பரந்து விரிந்த இந்த நாட்டில் வெறும் 44 மாதிரி மருத்துவமனைகள் மட்டுமே உள்ளன. இத்திட்டத்தின் மருத்துவமனைகளின் முழுமையான முறைமை பெரிதும் திருப்தியற்ற நிலையில் உள்ளது என்பது மட்டுமல்ல, மாதிரி மருத்துவ மனைகளிலும் கூட நவீன கால வசதிகளோ கருவிகளோ இல்லை. (பீகாரில் 150க்கும் மேற்பட்டக் குழந்தைகள் மூளை அழற்சி நோயால் பரிதாபமாக இறந்த நிலையில் அம்மாநில முதல்வர் பெரு நகரங்களின் மருத்துவமனைகளிலும் தேவையான வசதிகளோ கருவிகளோ இல்லை என ஒப்புக்கொண்டது இங்குச் சிந்திக்கத் தக்கது – மொழிபெயர்ப்பாளர் சேர்த்தது)

            நவீன மருத்துவப் பரிசோதனைகள் என்ற வகையில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், உயர்மிகு சிறப்பு மருத்துவக் கண்காணிப்பு மற்றும் உயர்திறன் மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் என்பன போதுமான அளவில் தேவைக்கேற்ப இல்லை. பணியில் இருக்கும் மருத்துவர்கள் எண்ணிக்கையை விட – அவர்களின் மனித சக்தியால் மருத்துவப் பணி ஆற்றும் பணிச்சுமை வரையறையைக் கடந்து – ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் நோயாளிகள் குவிகின்றனர். மருத்துவர் – நோயாளிகள் என்ற எண்ணிக்கை விகிதத்தில் பொருத்தப்பாடு இல்லை. மருந்துகளும் கூட போதுமான அளவில் கையிருப்பில் இல்லை என்று நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர். மருத்துவச் சோதனைகளுக்காகவும் உரிய மருந்துகளைப் பெறவும் பலமுறை நோயாளிகள் வெளியிடங்களை நாடிச் செல்ல கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். தனது சொந்த கட்டமைப்பை விரிவாக்கி, வலிமை பெறச் செய்து நோயாளிகளின் தேவைகளை இன்னும் திறமையாக நிறைவேற்ற வேண்டும்.

இப்படிச் சரியான முறையில் முறையாக மருத்துவ வசதிகளை அனைத்துத் தொழிலாளர்களுக்கும் கிடைக்கச் செய்தால் அதன் செலவு எப்படி இருக்கும் என்பதை இஎஸ்ஐ டெல்லி உதாரணத்தின் மூலம் காண முடியும். முதல்நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நோய்களுக்கும் மருத்துவம் முழுமையாக டெல்லி இஎஸ்ஐ மருத்துவ மனையில் நேரடியாக வழங்கப்படுகிறது. 2017 –18ல் மருத்துவ வசதிக்காகச் சராசரியாகச் செலவிட்ட தொகை ஒரு நபருக்கு ஆண்டுக்கு ரூ5,555/=.  இந்த வகையில் டெல்லி இஎஸ்ஐ மருத்துவ மனைக்கு ஆண்டிற்கு ரூ18,400 கோடி மொத்த மருத்துவச் செலவு மட்டும் ஆகி உள்ளது. 2017 –18ல் இஎஸ்ஐ சந்தா மூலம் வரவு மட்டும் ரூ 20,077 கோடி. நிகர இருப்பாக மீதம் இருப்பது 20077 (–) 18400 = ரூ 1,677 கோடி மட்டுமே.  இதில் மற்ற சமூக நலத் திட்டப்பயன்களை எல்லாம் வழங்கியாக வேண்டும்.  இப்போது சொல்லுங்கள், இஎஸ்ஐ சந்தா விகிதத் தொகையைக் குறைப்பது நியாயமா? புத்திசாலித்தனமானதா? முறையானதா?

தொழிலாளர் அமைச்சகத்தின் முடிவே அதிக அளவு சந்தா தொகை, (தொழிலாளர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் நலனுக்காக முறையாகச் செலவழிக்கப்படாமல்) குவிந்துபோகக் காரணம்.  சமூகப் பாதுகாப்புத் திட்டம் என்பதும் மருத்துவ உடல்நலக் காப்பீடு என்பதும் வேறு வேறு என வித்தியாசப்படுத்தி உணர வேண்டியது அவசியத் தேவை. சமூகப் பாதுகாப்பு என்பது மாற்ற முடியாதது, ஏனெனில், அது இந்திய அரசியல் அமைப்பு வழிகாட்டுநெறிகள் பிரிவு 39(e) 41 மற்றும் 42 ன் கீழ் நிறைவேற்றப்பட்டவை. மேலும், சமூகப் பாதுகாப்பு என்பது சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ)வின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று என்பது மட்டுமல்ல, இந்திய இறையாண்மை தேசம் அந்த ஸ்தாபனத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒன்று. நிலைநிறுத்தப்பட்ட மரபுகள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் சமூகப் பாதுகாப்பு என்பது நாட்டுக் குடிமகனின் அடிப்படை உரிமைகளில் பிரிக்க முடியாத துணை உரிமையும் ஆகி, கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய ஒன்றாகி விடுகிறது;  மாறாக அது, தொழிலாளி அல்லது முதலாளியின் விருப்பத்திற்கு உட்பட்ட ஒன்று அல்ல, விரும்பாதபோது தூக்கி வீசி எறிந்துவிட.

 சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட தரங்களின் அடிப்படையில் சமூகப்பாதுகாப்பு என்பதில் மருத்துவ வசதி, நோயுற்ற காலத்திற்கானச் சலுகை, மகப்பேறு நல வசதிகள், உடல்இயலா காலத்து வசதிகள், காயம்பட்டால் சலுகைகள், குடும்பத்திற்கான (வாரிசு) சார்ந்திருப்போருக்கான நலவசதிகள் என்பன நீட்டிக்கப்பட வேண்டுமென்பது கட்டாயமாக எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த வசதிகளில் எந்த ஒன்று மறுக்கப்பட்டாலும் அது தேசத்தின் அரசமைப்புச் சட்ட வழிகாட்டு நெறிகளுக்கு மாறாக நடப்பதே ஆகும். முடிவு எடுக்கும் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் – அது, நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு மனிதனின் உற்பத்தித் திறன் என்பது அந்த மனிதனின் உடல் நலத்தினை நேரடியாகச் சார்ந்து உள்ளது என்பதைத்தான்.  உடல் நலத்தைப் பாதிக்கும் வகையில் சமூகப் பாதுகாப்பு நலத்திட்டத்தின் எந்த அம்சத்தை நீர்த்துப்போகச் செய்ய முயற்சி செய்தாலும் அது உற்பத்தியை பாதிக்கும், அதனால் தேசத்தின் வளர்ச்சியையும் நேரடியாகப் பாதிக்கும் என்பதை ஒருபோதும் மறந்துவிடலாகாது.

                ”எவ்வழி நல்லை ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே!”

–நன்றி : நியூ ஏஜ்

–தமிழில் : நீலகண்டன்,

என்.எப்.டி.இ., கடலூர்