New Education policy

புதிய கல்விக் கொள்கை – ஒரு பார்வை

            484 பக்க கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை பொதுமக்களின் கருத்தறிவதற்காக ஆங்கிலம் இந்தி இரு மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இனி வரப்போகும் தலைமுறையைப் பல பத்தாண்டுகள் பாதிக்க உள்ள வரைவு யோசனைகள். அது பற்றி  ஒரு மாதத்தில் கருத்துத் தெரிவிக்க வேண்டுமென்ற அவசரப்படுத்தல். பாலர் பருவம் தொட்டு மும்மொழி பயிற்சி என்னும் ஆவணமோ இரண்டு மொழிகளில் மட்டும்.  இது அடிப்படையில் ஜனநாயகத்தன்மை அற்றது. அப்படிப்பட்ட வரைவறிக்கையைப் பற்றி இந்தக் கருத்தறிதல் ஒப்புக்கு நடைபெறுவதாக –சேலம் எட்டுவழிச் சாலை பற்றி கருத்தறிதல் நடத்தப்பட்டது போல – இருத்தல் ஆகாது.

            ஒரு தேசம் ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு என்ற பலவித முழக்கங்களுக்கு மத்தியில் ஒரு நாடு ஒரே கல்வி முறை என்பதும் சேர்ந்து கொள்கிறது. இது இந்திய நாட்டின் பன்மைத்துவத்திற்கு எதிரானது. ஒரு மனிதன் ஒரு ஓட்டு என்பதைத் தாண்டி ஒரு மனிதன் ஒரே சமூக மதிப்பு என்பது இன்னும் ஏற்படாத ஏற்றத்தாழ்வு நீடிக்கும் நாட்டில் — அனைவருக்கும் கல்வி என்ற சுதந்திர தேசத்தின் முயற்சியை — இந்தத் திணிப்பு மீண்டும் எட்டாக் கனியாக்கும்.

            காலத்திற்கேற்பக் கல்விமுறை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அதற்காகச் சுதந்திரத்திற்குப் பிறகு இன்றுவரை சாதிக்கப்பட்டவற்றை எல்லாம் கொட்டிக் கவிழ்த்து விட முடியாது.  சுதந்திரத்திற்குப் பிறகு அமைக்கப்பட்ட 1966 கோதாரி கமிட்டி போலவோ, டாக்டர் இராதாகிருஷ்ணன், டாக்டர் லட்சுமணசாமி, யஷ்பால் கமிட்டி போலவோ இந்தக் குழு அரசியல் சாசன முறைப்படி CABE போன்ற கல்விப் பிரதிநிதிகள் உள்ள  அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்படவில்லை. குழுவின்முன் நாட்டின் தற்போதைய கல்விநிலை குறித்த ஸ்டெடஸ் ஆய்வறிக்கையும் வைக்கப்படவில்லை.  ஆளும் அரசின் கொள்கைக்கேற்ப கல்விக் கொள்கைகளை வடித்துத் தருவதற்காக  அமைக்கப்பட்ட ஒரு குழு.

            அறிக்கை வரைவுப்பணி முடிந்த பிறகும் ஒன்னரை மாதகாலம் தன்னிடமே அறிக்கையை வைத்திருந்த குழு மக்களை மட்டும் உடனே கருத்துக் கூறு என்கிறது.  முதலில் இந்த அறிக்கை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மாநில மொழிகளிலும் மொழிபெயர்த்து அளிக்கப்பட வேண்டும்.  கருத்துக் கூற போதுமான கால அவகாசமும் வழங்கப்பட வேண்டும். பாராளுமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் ஆறு மாத காலம் காலநீட்டிப்புக் கோரி உள்ளார்கள்.

            முதல் கோணலாக மும்மொழி என்ற பெயரில் இந்தி கட்டாயம் என்று வெளி வந்த அறிக்கை தமிழகத்தின் கடும் எதிர்ப்பை அடுத்து இந்தி கட்டாயம் இல்லை, மூன்றாவது மொழி விருப்பத் தேர்வாக இருக்கும் என்று மாற்றப்பட்டது.  விழிப்பாக இல்லை என்றால் தற்போது மாநிலப் பட்டியலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி இன்னும் கூடுதலாக மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும். விருப்ப மொழி என்பதாக மாற்றப்பட்டதே தவிர மும்மொழிக் கொள்கை கத்தி தமிழகத்தின் தலைமீது தொங்குகிறது. அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் சமமாக உதவுவதற்கு மாறாக, சம்ஸ்கிரதம் மற்றும் இந்தி வளர்ச்சிக்கு மட்டும் பாரபட்சமாகச் சலுகை காட்டி குழு பரிந்துரைத்துள்ளது

            கல்வியைப் பள்ளிக் கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்வி மற்றும் பிரதமரின் தலைமையில் தேசிய நிர்வாக அமைப்பான  சிக்-ஷா ஆயோக் என நான்கு பகுதியாகப் பிரித்து இந்திய மையமாக்கப்பட்ட கல்வி முறை என்பதை வற்புறுத்துகிறது.  இதன் பொருள் இதுவரை நாம் பெற்றுவந்த கல்வி இந்திய விழுமியங்கள் சாராதது என்பதாக மறுதலிப்பது போன்றதாகும். இந்தியக் கல்விமுறையை நேரடியாக விளக்காமல், பண்டைய அறிஞர்கள் என்று சிலரை குறிப்பிடுகிறது.

            பள்ளிக் கல்வியில் 5 ஆண்டு பாலர் பருவம் இது குழந்தையின் 3வது வயது துவங்கியே முறையான கல்விப் புலத்திற்குக் கொண்டு வரப்படுகிறது.  இது குழந்தைமையின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்பது மட்டுமல்ல, சர்வதேச நடைமுறைக்கும் விஞ்ஞான குழந்தை வளர்ப்பிற்கும் பொருந்தாதது; 3,4,5 வகுப்பு வரை அடுத்த மூன்றாண்டுகள் ஆரம்பக்கல்வி, 6,7,8 நடுநிலை அதன்பின்னர் 9 முதல் 12ம் வகுப்பு வரை செகண்டரி.  ஹையர் செகண்டரி என்னும் 10 + 2 முறை இனி இல்லை. 9-ம் வகுப்பிலேயே மாணவர்கள் தரம் பிரிக்கப்பட்டுவிடுவார்கள், கணக்குப்பாடம் படிக்கக் கூடியவர்கள், உயர்கல்விக்குச் செல்ல வாய்ப்புள்ளவர்கள் என்றும்; மற்றவர்கள் பானை செய்ய, தோட்ட வேலைக்கு என உடல் உழைப்புப் பணிக்குப் பயிற்சி அளிக்கப்படுவார்கள் – இது மாணவப் பருவத்திலேயே கைத்தொழில் கற்றுத் தருவது என்று ஆவணம் தேனொழுக வார்த்தையாடுகிறது. குலக்கல்வி நவீன வேடத்தில் இனிய வார்த்தைகளில் முன்வைக்கப்படுகிறது.   

            வளர்ச்சி பெற்ற வெளிநாடுகளில் 8-ம் வகுப்பு வரை தேர்வு இல்லை. ஆனால் புதிய கல்விக் கொள்கை 3,5,8ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்கிறது. தேர்வு என்றாலே வடிகட்டல். சரி அப்படியே தேர்ச்சி பெற்றாலும்  பள்ளித் தேர்வுகளில் பெற்ற தேர்ச்சியை அப்படியே ஓரம் கட்டிவிட்டு, அடுத்து கல்லூரி உயர்கல்வியைத் தொடர தேசிய தகுதித் தேர்வைக் கட்டாயப்படுத்துகிறது.  இது மருத்துவம் போல அனைத்துப் படிப்புகளுக்கும் தகுதிப் போட்டியைக் கொண்டு வருகிறது.  நீட் தேர்வு வந்தபோதே அரசுப் பள்ளிகளின்  லட்சக் கணக்கான மாணவர்களில் ஒரே ஒருவர் மட்டுமே தேர்வு பெற முடிந்தது. இனி கிராமப்புற மாணவர்கள் கல்லூரி பட்டப்படிப்புக் கனவையும் மறந்துவிட வேண்டியதுதான்.  அதுமட்டுமின்றி வருமாண்டுகளில் மாணவர் சேர்க்கை குறைவு மற்றும் பள்ளி உட்கட்டமைப்பு குறைபாடுகளால் பள்ளிகளை ஒன்றிணைக்கவும், மூடிவிடவும் யோசனை கூறப்பட்டது போலவே, 50 ஆயிரம் கல்லூரிகள் 12 ஆயிரமாகக் குறைக்கப்படும் என்ற அபாய அறிவிப்பும் இந்தப் புதிய கல்விக் கொள்கையின் தாக்கத்தை விளக்கப் போதுமானது.

            சுருக்கமாகக் கூறுவதென்றால், இனி கல்வி தகுதி உடையவர்களுக்கு மட்டுமே என்று ஆக்கப்படுவதுடன், முழுமையான கடை விற்பனைச் சரக்காகக் கல்வியைக் கார்ப்பரேட் மயமாக்கி கல்வியை வணிகமயம் ஆக்குகிறது. சர்வதேச பல்கலைக் கழகங்களை அனுமதிக்கிறது. காட் ஒப்பந்தம், உலகமயத்திற்கு ஏற்ப அரசின் கல்விக் கொள்கையும் மாற்றப்படுகிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணங்களை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று கட்டணக் கொள்ளைக்கு முழு சுதந்திரம்.

            கல்வியியல் BEd கல்லூரிகளை மூடுவது, அதற்கு பதில் இளநிலையோடு சேர்ந்த நான்காண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பு. ஆசிரியர்களின் ஊதிய உயர்வு, பதவி உயர்வு சேவைக்கால அடிப்படையில் இன்றி திறமை அடிப்படையில் என்றெல்லாம் மாற்றங்கள். தவிர கல்வி மானியம், கல்வி உதவி இடஒதுக்கீடு அடிப்படையில் இராது; தகுதி, பொருளாதார அடிப்படை. தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீடிற்கும் உத்தரவாதமில்லை. 

            புறநாநூற்றுப் பாடல் கூறும், ’ மூத்தோன் வருக என்னாது -. அவருள், அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்’ என்றும்; மேலும், ’ கீழ்ப்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன் கண்படுமே’ என்று முத்தாய்ப்பும் செய்வது இனி நடைபெறாது தடுக்கப்படும். விவேகானந்தர் உரைத்த இனி உழைப்பவர்கள் எழுவார்கள், நான்காம் வர்ணத்தவர் ஆட்சி மலரும் என்ற சமூகநீதி இன்னும் தாமதிக்கப்படும்.  கோத்தாரி கல்விக் குழு பரிந்துரைத்து அரசாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கல்விக்கு (உள்நாட்டு மொத்த உற்பத்தி ஜிடிபி-யில்) 6 சதவீத பட்ஜெட் ஒதுக்கீடு செய்வது என்பது இன்றளவுக்கும் செயல்படுத்தப்பட வில்லை.  மத்திய, மாநில அரசுகளின் கல்வி ஒதுக்கீடென்பது வெறும் 3 சதவீத அளவிற்கும் குறைவானதாகவே உள்ளது. சமீபத்திய மத்திய பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்கப்பட்டது ரூ94,853.64 கோடி –இது ஜிடிபியில் 0.45 சதவீதம் மட்டுமே. இவ்வளவு குறைவாக செலவழிக்கும்போதே 4.7 கோடி இந்தியக் குழந்தைகள் 10ம் வகுப்போடு கல்வியை இடைநிறுத்தி விடுகிறார்கள், காரணம் கல்விச்சுமை என்று ஐ.நா. யுனெஸ்கோ அமைப்பின் 2016 ஆய்வறிக்கை கூறுகிறது. புதிய மாற்றங்கள் இடைநிற்றலை இன்னும் அதிகரிக்கும். இதன் பொருள் அரசு தனது சமூகப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது, அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிகளிலிருந்து விலகிச் செல்கிறது என்பதே.

            ஒப்பந்த ஊழியர்கள், நிரந்தர ஊழியர்கள் என்றவகையில் நமது மக்கட் செல்வங்களின் எதிர்காலத்தை இந்தக் கல்விக் கொள்கை பாதிக்கும் என்பதை உணர்ந்து இந்த ஆவணத்தின் மீது சமூகம் சார்ந்த அக்கறையோடும் பொறுப்போடும் விவாதத்தைக் கூர்மைப்படுத்துவோம். இதுகுறித்த கருத்தரங்குகள் விவாதங்கள் கட்டுரைகளிலிருந்து சிந்தனைத் தெளிவைப் பெறுவோம்.

            குடிமகன் என்ற வகையில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பும் உரிமையும் இருக்கிறது.  கல்வி பெறும் அடிப்படை உரிமையை நிறைவேற்ற அரசை வற்புறுத்துவோம்!