தோழர் குப்தா 98-வது பிறந்த நாளும், ”பென்ஷன் பிதாமகன் ஓ.பி. குப்தா” நூல் வெளியீடும்

குப்தா பிறந்தநாளான ஏப்ரல் 8அன்று NFTE தமிழ் மாநிலச்சங்கம் சென்னை தலைமைப் பொதுமேலாளர் அலுவலகத்தில் சிறப்பான விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. குப்தா என்றால் ஒற்றுமை.  அதற்கேற்ப விழாவில் அனைத்து சங்கங்களின் தலைவர்களும் கலந்து கொண்டது குப்தா நம்மிடையே வாழ்கிறார் என்ற உணர்வை ஏற்படுத்தியது. விழாவில் திரளான தோழர்கள் கலந்து கொண்டார்கள். மாநிலத் தலைவர் பி. காமராஜ் தலைமை வகித்தார்.  மாநிலச் செயலாளர் கே. நடராஜன் அனைவரையும் வரவேற்றார்.  முதல் நிகழ்வாக நூல் ஆசிரியர்களுள் ஒருவரான தோழர் ஆர். பட்டாபிராமன் நூலை அறிமுகம் செய்து சிறப்பான துவக்கவுரையாற்றினார்.  அவர் தமது உரையில்,

            ’’இது ஒரு தொழிற்சங்க இலக்கியம் – தொழிற்சங்க மறுமலர்ச்சி இலக்கியம்.  சங்கம் புத்தகம் வெளியிடுவது, வரலாற்றை ஆவணப்படுத்துவது என்பது நமக்கு புதியது அல்ல.  தோழர் குப்தா, தாதாகோஷ் பற்றி புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார்.  அது நம் மரபு—அதை நாம் கைவிட்டால்தான் தவறு.  ’வேலைநிறுத்தம் பற்றி லெனின்’ என்பது ஜெகன் வெளியிட்ட புத்தகம்.  அதுபோல நமது மாநிலச் செயலர்கள் புத்தகம் வெளியிட்டுள்ளனர்.

            நம்முடைய தொழிற்சங்க வரலாறு சமூகத்தின் அடித்தட்டு மக்களை நடுத்தர வர்க்கமாக வாழ்க்கைத் தரம் உயர்த்திய வரலாறு.  அது ஒரு சாதனை நிகழ்வு.  இந்தப் புத்தகம் அப்படியொரு சாதனையை அதன் வரலாற்று நிகழ்வுப் போக்குகளை விவரிக்கிறது.  அரசாங்கத்தின் கொள்கை நெருக்கடி, அதன் காரணமாக அரசுத் துறை பொதுத்துறையாக மாற்றம் பெறுவது, மாற்றத்தின் ஊடே தொழிலாளர்களின் நலன் காக்க நடைபெற்ற போராட்டங்கள், விதிகளில் எற்படுத்திய மாற்றங்கள் என பென்ஷன் மாற்றத்தை குப்தா எப்படிச் சாதகமாக்கினார் என்பது விவரிக்கப்பட்டுள்ளன.  இந்தப் புத்தகத்தின் குறிப்பிடத்தக்க அம்சம், இதில் எந்த வரிகளிலும் ’துரோகி’ என்ற வார்த்தை இடம் பெறவில்லை. மிகுந்த மனச்சான்று உணர்வுடன் புத்தகம் ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் எவருடைய அல்லது எல்லோருடைய போதாமைகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

            அரசின் தன்மை, 1990களில் துவங்கிய பொருளாதார மாற்றம் – புதிய பொருளாதாரக் கொள்கை, இதனால் தொலைத்தொடர்பு பகுதியும் உலகமயத்தோடு இணைத்தாக வேண்டிய கட்டாயச் சூழல் …இவைதான் மாற்றத்தின் துவக்கம்.  இதனால் ஏற்பட்ட பிரச்சனைகளைத் தொழிற்சங்கங்களும் எதிர்கொள்ள வேண்டி வந்தன.  தோழர் டாங்கேயின் பொன்மொழியான ’சீறும் எருதை அதன் கூரிய கொம்பைப் பிடித்து நிறுத்துவது’ போன்று பிரச்சனைகளைத் தீரத்துடன் எதிர்கொள்வது என்ற பாடத்தைப் பயின்றவர் குப்தா.

            கார்பரேஷன் ஆவதை நாம் ஏன் எதிர்க்கிறோம் என்பதை விளக்கினோம்.  அமைச்சரவை நான்கு முறை கூடி விவாதித்தது.  05-07-89 ல் உத்தரவு வெளியிட்டது.  அந்த உத்தரவு ஊனமுடையது என அதன் குறைபாட்டைக் குப்தா கண்டுபிடித்தார்.  அந்த உத்தரவு ’சட்டபூர்வமாக’ (statutory) இல்லை என்றார்.  அமைச்சரவைக் குழு அதை ஒப்புக் கொண்டது.  அதன் பிறகும் குப்தா ஏன் போராடினார்? காரணம், உத்தரவில் மாற்றம் செய்த பிறகும் குப்தா கோரிய பாராளுமன்ற ’சட்டபூர்வ’ கம்பெனியாக அது வரவில்லை.  பென்ஷன் வழங்குவதற்கு அரசு பொறுப்பேற்கும் என்பதை மாற்றி, பென்ஷனை அரசே வழங்கும் என்ற உறுதியான நிலையை உருவாக்கினார்.

            குப்தாவின் தனிச் சிறப்பு, விதி 37-ஏ கொண்டுவரச் செய்தது.  அது பொதுவானது, அனைவருக்கும் பொருந்தக்கூடியது.  அதையும் தாண்டி BSNL (ஊழியர்களு)க்குச்   சிறப்புச் சலுகையாகத் துணை விதிகளை ஏற்படுத்தச் செய்தார்.  அவை பற்றி இந்நூல் விரிவாகப் பேசுகிறது.

            பென்ஷன் பங்குத் தொகை (60 : 40) அளிப்பதில் நிதிஅமைச்சகத்தோடு என்ன பிரச்சனை?  இதில் அமைச்சரவைக் குறிப்பு என்ன சொல்கிறது?  ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட அமைச்சரவைக் குறிப்பிலிருந்து ’ஏற்றுக் கொள்ளப்பட்ட அமைச்சரவைக் குறிப்பு’ (approved Cabinet Note) எப்படி மாறுபடுகிறது என்பதெல்லாம் புத்தகத்தில் விரிவாக உள்ளது.தோழர்கள் ஆழமாகப் பரிசீலிக்க வேண்டி இடம் இது. காரணம் வரைவு அமைச்சரவைக் குறிப்பில் பல சாதகமான அம்சங்களை DOT & BSNL அதிகாரிகள் இடம்பெறச் செய்திருந்தார்கள்.  ஆனால் அந்த வரைவு குறிப்பு ’ஆகா, சரி, அப்படியே ஆகட்டும்’ என்று அப்படியே ஏற்கப்படவில்லை.

            குப்தா உயிரோடு இருந்தவரை கடைசிவரை எப்.ஆர்.116படி பென்ஷன் பங்குத் தொகை அளித்தால் போதும் என்பதன் மீது போராடினார்.  இப்போது 60 : 40 பிரச்சனை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

            MTNLல் போட்ட சண்டைகள், அங்கு காசுவல் ஊழியர் நிரந்தரம் இல்லை. பென்ஷன் மாற்றம், ஊதியமாற்றமின்றி பென்ஷன் மாற்றம் செய்யப்பட்டால் என்ன முரண்பாடுகள் ஏற்படும் என்பது பற்றி ஒரு கட்டுரை விவாதிக்கிறது.

            இது தவிர தோழர் குப்தாவின் பன்முகப்பண்புகள், அவரின் ஆளுமை, மனிதநேயம், ஏனைய சாதனைகள் என உற்சாகம் தரும் பல அனுபவங்களை நமது மேனாள் மாநிலச் செயலர்கள் கட்டுரை ஆக்கித் தந்துள்ளார்கள்.  நமது தோழர்கள் மத்தியில் இந்நூல் பெரும் வரவேற்பைப் பெறும் என நம்புகிறேன்’ என்ற அளவில் நன்றியோடு நூல் அறிமுக உரையை நிறைவு செய்கிறேன்”.

            அடுத்து சென்னை மாநிலச் செயலர் தோழர் சி.கே. மதிவாணன் உரையாற்றினார். ’குப்தா இந்தியா கண்டிராத ஒரிஜினல் தலைவர். இப்போது குப்தா இல்லையே என்ற ஏக்கத்தை காமராஜ் குறிப்பிட்டார்.  அது உண்மைதான். பணியில் இருந்தால் ஊதியம் உறுதி இல்லை; ஆனால் ரிடையர் ஆனால் பென்ஷன் உறுதி என்ற நிலை.  இந்த விழா ஏற்பாடு செய்ததற்காகத் தமிழ்மாநிலச் சங்கத்தைப் பாராட்டுகிறேன்.  குப்தாவை முதன்முதலில் நான் 1977ல் கும்பகோணத்தில் பார்த்தேன். நான் சாப்பாட்டில் பிரியம் உள்ளவன். மாநாடுகளில் உணவு தாமதமானால், நீண்ட கியூ இருந்தால் ஹோட்டலுக்குப் போய்விடலாம் என்று நினைப்பேன்.  ஆனால் குப்தா மாநாட்டு அரங்கில் தோழர்களோடுதான் சாப்பிடுவார்.  அவர் கூறினார், ’poor man eats whatever he gets but rich man eats whenever he wants| (ஏழை கிடைத்ததை உண்பான், பணக்காரன் நினைத்தபோது தான் விரும்பியதை உண்பான்). அந்த அளவு எளிமையான தலைவர்.

            ஓய்வு பெற்றபின் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று பட்டாபி போல நானும் நினைத்தேன்.  ஆனால் தொழிலாளர்களின் விருப்பத்திற்கு முன் நம் விருப்பம் நிற்க முடியாது. அறிவாளியான பட்டாபி மத்தியில் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என நான் விரும்பினேன்.

            கார்பரேஷனாக மாறும்போது சங்கங்களுடன் அரசு ஒரு உடன்பாடு செய்தது.  உடன்பாட்டை நிறைவேற்றாவிடினும், அதற்கு நேர் எதிரிடையாகச் செயல்படுவது என்பது வேறு.  BSNLலின் நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பேன் என்ற அரசு இன்று நிறுவனத்தை மூட நினைப்பதாகச் செய்திகள் வருகின்றன.  எனவே அதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்க உள்ளேன். யாரும் செய்யாததை நான் செய்கிறேன் – அது சரி என்று நினைக்கிறேன்.

            ஒப்பந்தம் கையெழுத்து ஆகும்முன் குப்தா தன் கைப்பட trust fund என்பதை consolidated fund என்று திருத்தியதை நான் பார்த்தேன். குறிப்பிட்டு விடைபெற்றார்.

            அடுத்து குப்தாவோடு ஒன்றாகப் போராடி பொதுத்துறை மாற்றத்தின் உடன்பாடு கண்ட FNTO சம்மேளனத்தின் மேனாள் பொதுச் செயலாளர் தோழர் வள்ளிநாயகம் மிகுந்த நெகிழ்ச்சியோடு உரையாற்றினார்: “சிறப்புத் தருணங்கள், நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். பென்ஷன் உடன்பாட்டின் போது FNTO சார்பில் நான், அருகே OPG எதிரே அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான். அன்றைய DTS துறையின் செயலாளர் வினோத் வைஸ்.  அப்போது நடந்த தனிப்பட்ட உரையாடல் இன்றும் நினைவிருக்கிறது, வினோத் வைஸ் குறிப்பிட்டார், ’ நீங்கள் ஓய்வு பெற்றால் உங்களது ஓய்வூதியம் உறுதி;  ஆனால் (ஓய்வு பெறும்) அது வரை உங்களது ஊதியத்தைச் சம்பாதிக்க நீங்கள் உழைத்துத்தான் உண்டாக்க வேண்டும்.’ நிதி அமைச்சர் S.N.சின்ஹா கன்சாலிடேட்டட் பண்டு என்பதை வற்புறுத்தாதீர்கள். டிரஸ்ட் பண்டு அமைப்பில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள் என்றார்.  எங்களுடைய பெடரல் கவுன்சில் கூடித்தான் முடிவெடுத்தோம்: அப்போது பண்டு அமைப்புகளின் நிகர இருப்பிலிருந்து, ஷேர் மார்க்கெட்டில் பண்டு தொகையை முதலீடு செய்யலாம் என்ற அபாயம் இருந்தது.  எனவே நாங்கள் முடியாது, கன்சாலிடேட்டட் பண்டிலிருந்துதான் ஓய்வூதியம் என்பதில் உறுதியாக இருந்தோம்.

            அதே போல பாஜக அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி அவர்களுக்கே ஒரு புராணக் கதையை நான் எடுத்துச் சொன்னேன்.  அமைச்சர் டெக்னிகலாக ரிசைன் செய்யாமல் பொதுத்துறைக்குப் போவதென்பது ’உடலோடு சொர்க்கம் போக’ அடம் பிடிப்பது போல என்றார்.  அப்போதுதான் நான் சொன்னேன், தர்மன் உடலோடு சொர்க்கம் போனான், போகும் வழியில் தன் தம்பிகள் ஒவ்வொருவராக நிறுத்தப்பட்டு விட, அவன் பின் கடைசி வரை வந்தது நாய் வடிவில் தர்மதேவதை மட்டுமே என்றேன். ஆனாலும் நாம் ஈட்டிய விடுப்பு, ஜிபிஎப், பென்ஷன் உரிமையோடு தான் வந்தோம்.

            பேச்சுவார்த்தைக்குப் போகும் முன் குப்தா போன் செய்தபோது நான்,’ ஒரு ஆட்டோ பிடித்து உங்கள் அலுவலகம் வந்து விடுகிறேன்’ என்றேன்.  உடனே குப்தா, ’ஏன் ஆட்டோவிற்கு 20 ரூபாய் செலவு செய்கிறீர்கள்.  நான் என்னுடைய ஸ்கூட்டரை எடுத்து வந்து விடுகிறேன்’ என்று கூறி அப்படியே என்னைக் கூட்டியும் சென்றார்.  அவ்வளவு எளிமையான தலைவர் குப்தா.  அவர் எவ்வளவு நகைச்சுவை உணர்வு மிகுந்தவர் தெரியுமா?

            ஜெசிஎம்-ல் விவாதிக்கும் போது எனது தரப்பை எடுத்துக்கூற முழுமையாக வாய்ப்பு அளிப்பார்.  அப்படி எந்தத் தலைவர் செய்வார்?  ஆனால் சிரித்துக் கொண்டே கடைசியில் ஜெசிஎம் சேர்மனிடம், ’இவ்வளவு நேரம் நீங்கள் வள்ளியின் கோரிக்கையை கேட்டுக் கொண்டிருந்தீர்கள்; இப்போது நான் கேட்டுக்கொண்டபடி உத்தரவு போட்டு விடுங்கள்’ என்பார்.

            அவர் பென்ஷன் பிதா என்பது சரி. அவர் பிதா, இதோ மகன் நான் இருக்கிறேனே என்று வள்ளி நகைச்சுவையாக பென்ஷன் தீர்வு கூட்டுப் போராட்டம், கூட்டுத் தீர்வு என்பதைப் பதிய வைத்தார்.

            ”தோழர் மதி வழக்குத் தொடுக்க நீதிமன்றம் செல்வது பற்றி குறிப்பிட்டார். நான் அதை எதிர்க்கவும் இல்லை, வாழ்த்தி வரவேற்கவும் இல்லை.  ஆனால் எச்சரிக்கை தேவை என கூற விரும்புகிறேன்.  கோர்ட் என்ன தீர்ப்பு தந்துவிடப் போகிறது – ஒன்று நம்முடைய கோரிக்கையை ஏற்கப் போகிறது அல்லது நிராகரிக்கப் போகிறது– என்றார்.  உண்மையில் பிரச்சனை அவ்வளவு எளிமையான, சுலபமான ஒன்று அல்ல.  தீர்ப்பு நமக்குச் சாதகமில்லாது போனால், அரசின் கையில் அது ஓர் ஆயுதமாகிவிடும்.  தீர்ப்பை விட தீர்ப்பு உண்டாக்கும் விளைவு கடுமையானது என்ற எச்சரிக்கை தேவை.

            நான் கூட ஓய்விற்கு பிறகு தீவிரமாகத் தொழிற்சங்கத்தில் செயல்படுவதில்லை.  ஆனால் தோழர் முத்தியாலு ஓய்வு பெற மறுப்பவர், அதேபோலத் தான் தோழர் ஆர். வெங்கடாஜலமும் –ஓய்வூதியர்கள் அமைப்பில் தொடர்ந்து உழைக்கிறார்கள்.  விழாவிற்கு என்னை அழைத்தமைக்கு நன்றி” என்று நெகிழ்ச்சியாக உரையாற்றினார்.

தோழர் இஸ்லாம் அகில இந்தியத் தலைவர் தமது உரையில்: ‘’2000த்தில் BSNLல் இணைந்தவர்களில் 10 வருடம் முடிக்காதவர்கள் உண்டு.  அவர்கள் நிலையிலிருந்து குப்தா சிந்தித்தார்.  போராட்டத்தில் அனைவரையும் அரவணைத்துச் சென்றார். கார்பரேஷனாக மாறும் போது மூன்று விடயங்களில் உறுதியாக இருந்தார்; பென்ஷன், பணி பாதுகாப்பு மற்றும் நிறுவனத்தின் நிதி ஸ்திரத்தன்மை. அவற்றை அமைச்சர்கள் குழுவிடம் வலியுறுத்தினார்.  திட்டத்தை எதிர்ப்பதாக BTEF கூறியபோது, அமைச்சர் டாக்டர் முரளிமனோகர் ஜோஷி ’இது அரசின் முடிவு’ என்று கடுமையாகக் கூறினார். அதில் அவர்கள் கிளீன் பவுல்டு. வள்ளி, ’மூன்று நிபந்தனைகளின் பேரில் நாங்கள் ஆதரிக்கிறோம்’ என்றார்.  குப்தா,’ இது அரசின் முடிவென்பது சரி.  அமைச்சரவைச் செயலாளர் தனது பென்ஷனைக் கைவிடத் தயார் என்றால் மூன்றரை லட்சம் ஊழியர்கள் நாங்களும் பென்ஷனைக் கைவிடத் தயார்’ என்றார். அதன் பிறகுதான் அமைச்சர், ’பென்ஷன் உரிமையை எடுத்துவிடப் போவதில்லை’ என்றார்.  இதனால் டிஸ்மிஸ் ஆனால்கூட ஒருவரால் பென்ஷன் பெற முடியும் என்ற பாதுகாப்பு.

            நாம் தற்போது கடுமையான காலத்தைக் கடந்து வருகிறோம்.  ஆனால் கலங்கி அச்சப்படத் தேவையில்லை.  நாம் நமது புத்திசாலித்தனத்தை மரபார்ந்த நம் அறிவாற்றல் – அனுபவத்தால் இதை வெல்வோம்.  பிரச்சனைக்குச் சட்டப்படியான தீர்வு காண்பதென்பது கடைசி ஆயுதமே.  தற்போதே பயன்படுத்தத் தேவையில்லை.  கார்பரேஷன் மாற்றத்தில் குப்தாவின் செயல்பாடு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதது’

தோழர் சுப்புராமன் TEPU தமது வெளிப்படையான உரையில் கூறியதாவது: ’‘நான் பெரும்பகுதி குப்தாவின் எதிர்ப்பு அணியிலேயே வளர்ந்தவன். அவ்வளவு ஏன், நான் அவரை லோ கோட்டேஷன் என்று விமர்சனம் செய்தவன்.  இன்று அவரைப் போன்ற தலைவர்கள் இல்லை.  நல்லது செய்தால் எந்த அரசையும் ஆதரிப்பார்.  தொழிலாளர்களுக்கு நன்மைஅல்லாதது செய்தால் எந்த அரசையும் எதிர்க்கத் தயங்க மாட்டார்.  நமக்கு ஐடென்டிஃபிகேஷன் – (இசங்களோடு) அடையாளப்படுத்திக் கொள்வது – பிரச்சனை.  அவருக்கு அது இல்லை. என்னைக் கூட இன்று கேட்கிறார்கள், ’ஏன் கார்பரேஷனை ஏற்றுக் கொண்டீர்கள்?’.  சரி, மறுத்து இருந்தால் என்ன செய்திருப்போம்?

            ஆட்சியில் இருப்பவர்களுக்கு (sense) அறிவு உணர்வு இருக்குமானால் நம்முடைய போராட்டங்களும் அப்படி இருக்கும்.  இன்று என்னுடைய கணக்கில் மாதம் ரூ28ஆயிரம் வரவு வைக்கப்பட்டுவிடுகிறது.  அந்தச் சமூக பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தோழர் பட்டாபி சரியாகச் சொன்னார், அது நமக்கு மட்டுமில்லை, இனி எந்தத் துறை கார்பரேஷனாக மாறினாலும் பென்ஷன் உறுதி என்பது குப்தாவின் சாதனை.  1 லட்சம் காசுவல் மஸ்தூர்கள் நிரந்தரம் இந்தியாவில் எந்தச் சங்கமும் சாதிக்காதது.

            நம்முடைய நிறுவனத்தின் கடன் 13ஆயிரம் கோடி மட்டும் தான்.  ஏனைய தனியார் கம்பெனிகள் லட்சம் கோடிகளாகக் கடனில் உள்ளன.  இந்திய தொழிலாளர் மாநாடு ILC 2015க்கு பிறகு நடைபெறவில்லை என்பது அவமானகரமானது. குப்தாவின் 100 வது பிறந்த நாளைக் கொண்டாடும் போது சிறுசிறு பிரச்சனைகளைக் கடந்து வெற்றிகரமாகக் கொண்டாடுவோம்!”

தோழர் ஆர். வெங்கடாஜலம் அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் தமிழ்மாநிலச் செயலாளர் தமது கருத்தாகக் கூறியது: ‘’ஓய்வூதியம் குப்தாவால் உறுதி செய்யப்பட்டது என்பது மறுக்க முடியாதது.  அதற்காக அவர் எடுத்த முயற்சிகளை எனக்கு முன்பு பேசியவர்கள் எடுத்துரைத்தார்கள். நிறுவனத்தின் நிதி ஸ்திரத்தன்மை குப்தாவின் தீர்க்கதரிசனம். 2004 ஜனவரியில் மைசூரில் நடந்த மாநாட்டில் IDA-வுடன் பென்ஷன் பெறுவதற்கான கூட்டுப் போராட்டத்தை அறிவித்தார். DOT பென்ஷனர்களின் சுமையை நிறுவனம் ஏற்க முடியாது என்பதை வலியுறுத்தினார். 

            விஆர்எஸ் பற்றி வாட்ஸ்அப் செய்திகள் நம்பத் தேவையில்லை.  தேர்தல் நேரத்தில் முடிவெடுக்க மாட்டார்கள் என நம்பியதற்கு மாறாக, தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் பெறப்பட்டு, நிறுவன மறுகட்டமைப்பிற்காக PMO வழிகாட்டு குறிப்புகள் கவனத்தில் கொள்ள வேண்டியவைகளே.  சம்பள தாமதம் கண்டித்து நடைபெறும் போராட்டங்களில் ஓய்வூதியர்கள் கலந்து கொள்வார்கள் என நான் தோழர் நடராஜனிடம் கூறினேன்.

பென்ஷன் பங்களிப்பு பிரச்சனை தற்போது தீர்க்கப்பட்டுள்ளது.  ஓய்வூதியர்களின் கூட்டங்களில் நான் பேசும் போது குப்தா மற்றும் வள்ளியின் பங்களிப்பு பற்றி எடுத்துக் கூறத் தயங்குவதில்லை.  புத்தக வெளியீட்டிற்கு எனது வாழ்த்துக”.

 தோழர் சந்தேஷ்வர் சிங் சம்மேளனப் பொதுச் செயலாளளின் முக்கியமான உரை: ”அனைவரும் பேசியதை நான் வழிமொழிகிறேன் –குப்தாவை வணங்குகிறேன். நாம் நிச்சயம் அவரது பாதையில் சகிப்புத் தன்மையோடு, ஒற்றுமையைக் கட்டிக்காத்து ஒன்றுபட்டு நடைபோடுவோம். ஆனால் அந்த மேன்மையான குணங்கள் தற்போது குறையத் தொடங்கி உள்ளது.  குப்தா, தலைகள் உடையலாம் – சம்மேளனம் உடையக் கூடாது என்று வலியுறுத்தியவர்.

தோழர் (சி.கே.) மதி(வாணன்) ஒரு முக்கியமான பிரச்சனையைத் தொட்டுச் சென்றிருக்கிறார். அவர் அதை இங்கே பேசியிருக்கக் கூடாது, அந்தப் பிரச்சனையை எழுப்பி இருக்கக் கூடாது என்றே நான் கருதுகிறேன். மேலும் இவ்வளவு முக்கியமான பிரச்சனையை வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் விவாதிப்பது முற்றிலும் தவிர்க்க வேண்டியது, ஆரோக்கியமற்றது.

இது ஒரு மாநிலப் பிரச்சனை அல்ல.  அகில இந்திய அளவிலான பிரச்சனையை ஒரு தனி மாநிலச் சங்கம் கையில் எடுப்பதற்கு அதிகாரம் இல்லை. சென்னை மாநிலச் சங்கச் செயற்குழுவிற்கும் இந்த அதிகாரம் இல்லை.  ஒரு மாநிலச் சங்கம் மற்ற  மாநிலச் சங்கங்களுக்காக முடிவு செய்ய முடியாது.  அதுவும் உயர்நீதிமன்றத்தை விட்டுவிட்டு நேரடியாக உச்சநீதி மன்றம் செல்வது என்பது பிரச்சனையை ஏற்படுத்தக் கூடியது.

நம்முடைய மத்திய செயற்குழு கூடி நீதிமன்றம் செல்லலாம் என்ற ஒரு முடிவு எடுத்தாலும் கூட, அப்போதும் மற்ற சங்கங்களைக் கலந்தாலோசிக்கத்தான் வேண்டும்.  அவர்களும் பாத்தியதைப்பட்டவர்கள் அல்லவா.  குப்தா அனைவரையும் அரவணைத்துத்தான் சென்றார் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

நான் தோழர் மதிக்கு ஒன்றைக் கூறிக் கொள்வேன், நீங்கள் உங்கள் நடவடிக்கையால் நம் அமைப்பிற்கு நன்மை செய்யவில்லை..  இப்படிச் சொல்வதால் உங்கள் கருத்தை நான் புறக்கணிக்கிறேன் என்பது பொருள் அல்ல; நிச்சயம் உங்கள் கருத்தை மத்திய சங்கம் கருத்தில் கொள்கிறது.  ஆனால் தற்போதைய உங்கள் செயல்பாட்டை ஆதரிக்க வில்லை.

முன்பும் அப்படித்தான், தோழர் மதி பிரச்சனையை எழுப்பிவிட்டு, (சபையின்) பதிலுக்காக காத்திருப்பதில்லை, சென்று விடுகிறார்.  அவர் பிரச்சனையை எழுப்பி விட்ட காரணத்தால் அவர் இல்லாதபோதும் இதை நான் தெளிவு படுத்துவது கடமை என்று கருதுகிறேன்.  ஏனெனில், அனைத்துச் சங்கக் கூட்டமைப்பின் சேர்மன் என்ற வகையில் அனைவரையும் ஒரு குடையின் கீழ் அரவணைத்துச் செல்லவே நான் பெரிதும் முயல்கின்றேன்.”

தோழர் துரையரசன் SNEA  நான் முன்னாள் என்எப்டிஇ  தஞ்சை மாவட்டச் செயலரும் கூட. ஒரு புகைப்பட ஆல்பத்தைப் பார்த்தால் முதலில் நமது புகைப்படம் இருக்கிறதா என்று பார்ப்போம். நானும் அது போலத்தான், புத்தகத்தில் தஞ்சையைப் பற்றி இருக்கிறதா என்று தேடினேன். பல மணி நேரம் பேசி விளக்குவதைத் தற்போது வாட்ச் அப் முதலிய சமூக ஊடகத்தில் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றனர். அதைப்போலவே இந்தப் புத்தகமும் குப்தாவைப் பற்றி சுருக்கமான புத்தகம் –ஆனால் ஒரு பட்டறைக்குக் கருப்பொருளாக இருக்கும்.  அந்தத் தலைவருக்குத்தான் எவ்வளவு சிறப்பு, தீர்க்க தரிசனம், மனிதநேயம்.

            ஒரு மாநாட்டிற்குச் சென்று திரும்பும் வழியில் பத்து பேரோடு கோவா சுற்றிப் பார்க்கச் சென்றோம்.  எங்கே தங்குவது எங்கே போவது ஒன்றும் தெரியாது, ஓர் ஆர்வத்தில் வந்து விட்டோம்.  குப்தா அங்கே இருந்தார். பத்துபேரையும் அவரோடு அவர் தங்குமிடத்திற்கே கூட்டிச் சென்றார்.  நாங்கள் படகு சவாரிக்குச் சென்றோம். ஒரு திட்டு மாறி இன்னொரு திட்டுக்கு.  அங்கே ஒருவர் ஏதோ இந்தியில் சொன்னார் – பிறகுதான் தெரிந்தது, இந்த நேரத்திற்குப் பிறகு அங்கிருந்து திரும்ப படகு சேவை கிடையாது என்று சொல்லி இருக்கிறார்.  நாங்கள் அதை உணராது சென்று மாட்டிக் கொண்டோம். ஒரிரண்டு கிலோ மீட்டர்கள் ஓடி எப்படியோ ஒரு படகைப் பிடித்து மீண்டும் கரை வந்து சேர்ந்தோம்.

            தங்கும் விடுதி வாயில் கேட்டில் தோழர் குப்தா நின்றிருந்தார், தாமதமான அந்த இரவு நேரத்தில் எதுவும் சாப்பிடாமல் – நாங்கள் திரும்ப வேண்டுமே என்ற கவலையோடு.  உண்மையைச் சொல்கிறேன், எங்க அப்பா கூட அப்படி நின்றிருக்க  மாட்டார்.

            நிர்வாகம் விஆர்எஸ் திட்டம் கொண்டு வந்தபோது குப்தா அதை தனது விஆர்எஸ் திட்டமாக மந்திரம் செய்தார்.  அவர் மீண்டும் வந்திருந்தால் அது நடந்திருக்கும்.  அது இருவரும் வெற்றி அடையும் வின்—வின் மாற்றம்.  ஒரு CAO அதைத்தான் சொன்னார், ’நான் விஆர்எஸ் வாங்கி இருப்பேன், எனது 20 ஆயிரம் சம்பளத்தில் 10 ஆயிரம் பென்ஷனாகக் கிடைக்கும். கூடவே வேலைஇல்லாத படித்த இளைஞனான என் மகனுக்கு 10 ஆயிரத்தில் வேலை.  நிர்வாகத்திற்கும் கூடுதல் செலவில்லை, வரவு நிர்வாகத்திற்கு புது ரத்தம். எனக்குப் பென்ஷன் –என் மகனுக்கு வேலை.  அந்த அற்புதம் நிகழாது போனது’ என்று அந்த CAO வருத்தத்தோடு கூறினார்.

            குப்தா, மாநாடுகளில் உடனே தூங்கச் சென்றுவிட மாட்டார், சுற்றி வருவார் –யார் என்ன பேசுகிறார்கள் என்று; அணிகளிடமிருந்து தொடர்ந்து கற்றுக் கொள்ளும் தலைவன். ஒரு போராட்டத்தை எப்போது துவக்குவது என்பது ஒரு பெண்ணைக் காதலிக்கும் போது உள்ள தவிப்பை போல என்பார். அந்தத் தலைவனின் உதாரணங்கள் குடும்பப் பாங்கானவை.  ஒருமுறை குப்தாவைக் கேட்டோம், நமது உறுப்பினர்கள் பதவி உயர்வு பெற்றுச் சென்றால் சங்க உறுப்பினர் எண்ணிக்கை குறையுமே, பிறகு ஏன் பதவி உயர்வு கோரிக்கைகளை வைக்கிறீர்கள்.  தந்தையின் வாஞ்சையோடு அந்தத் தலைவன் சொன்னான், ’கல்யாணம் செய்து வைத்தால் தனிக் குடித்தனம் போவான் என்று தெரியும், ஆனாலும் தந்தை திருமணத்தை நடத்தி வைப்பதில்லையா, அது போலத்தான்’ என்றார்.

சி. பலராமன் SEWA BSNL : அதிகம் படிக்காதவர்களுக்கும் பணி, பணிபாதுகாப்பு பெற்றுத் தந்தவர்.  இணைந்து செயல்படுவதில் எப்போதும் உறுதி கொண்டவர். நாங்கள் என்ன கேட்கிறோம், எங்களுடைய அமைப்பிற்கு சுய மரியாதை.  எங்கள் சங்கத்தை உடன் அழைத்துச் செல்லுங்கள் என்றுதான் விரும்புகிறோம்.

வளனரசு SNEA :  நமக்குள் உள்ளது தொப்புள் கொடி உறவு. அவர் தொழிற்சங்க பிதாமகன். புத்தகத்தில் ஓர் இடத்தில் பார்த்தேன் – ஒரு தலைவனுக்கு எது கூடாது என்று கூறியிருக்கிறார்: ‘ஒரு தலைவன் உணர்ச்சிவயப்படுதலுக்கோ அன்றி அதி உற்சாக நிலைக்கோ சென்றுவிடக் கூடாது’.  எவ்வளவு சரியான பாடம்.  அவருடைய கடும் உழைப்பால்தான் ஒரு சாதாரண கிளார்க் டிஜிஎம்-ஆக உயர்வு பெற முடிகிறது, இது வேறு எந்தத் துறையிலும் காண முடியாதது. அந்தப் பெருமைக்கு வேறு யாரும் சொந்தம் கொண்டாடிவிட முடியாது”.  

ராஜசேகர் AIBSNLEA : “ஏன் விஆர்எஸ்—ஐ ஊழியர்கள் ஆதரிக்கிறார்கள்? ஏனென்றால் இன்று பென்ஷன் நிச்சயம் என்ற நிலை.  விதி 37-ஏ அனைவருக்கும் பொது. உண்மைதான், ஆனால் 20 வருடங்களுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று சிந்தித்த தலைவர் குப்தாவைத் தவிர இன்று வேறு யாருமில்லை.  நம்மீது கை வைக்கப் பயப்படக் காரணம் அன்று அவர் கண்ட உடன்பாடு.  புத்தகம் மிகுந்த பயனுடையது.  அவரோடு ஒருமுறை நானும் ஒரு கூட்டத்தில் இராஜ அண்ணாமலை மன்றத்தில் இருந்திருக்கிறேன்.  குப்த்வைப் பின்பற்றுவது என்றால் தலைவர்கள் தங்கள் ஈகோ-வை விடுவதுதான்.

கிருஷ்ணன் TEPU : ”பொறுப்பில் இல்லாத நிலையிலும் ஒருமுறை தோழர் குப்தா கூட்டத்தின் ஓரத்தில் வந்து நின்றார்.  அது அவருடைய பெருமை—தொழிலாளர்களோடு அவருக்குள்ள உறவு”

தோழர் ஆர்.கே. : நன்றி கூறும் கட்டத்தில் நிற்கிறேன்.  இந்தப் புத்தகத்தைப் பொருத்தவரை எனக்குக் கிடைத்த ஓட்டல் மாஸ்டர் பட்டாபி. இப்படி ஒரு புத்தகம் வெளியிடலாம் என்றபோது மறுதலிக்காமல் ஏற்றுக் கொண்டார். குப்தாவிடம் கற்றுக் கொண்டது ஏராளம், ஆனால் அதைச் செயல்படுத்த நான்கு பிறவி வேண்டும்.  காப்பிக் கடையோ இட்லிகடையோ நடத்துபவர் காப்பியும் இட்லியும் சாப்பிடலாம் – ஆனால் சாராயக் கடை நடத்துபவர் சாரயத்தைக் குடிக்க முடியுமா அல்லது குடித்துவிட்டு கடையை நடத்தத்தான் முடியுமா? இது குப்தா சொன்னதுதான், ’படை வீரன் தவறு செய்யலாம் ஆனால் படைத் தலைவன் சிறிய தவறையும் செய்து விடக் கூடாது’.  நடைமுறை உதாரணங்கள் பல.

            மார்கெட் சென்று பொருள் வாங்கச் சொன்னால் அதில் பல மறந்துவிட்டு வருபவர் உண்டு.  ஆனால் அவற்றோடு கொசுறாக கறுவேப்பிலை கொத்துமல்லி வாங்கி வருபவர்களும் உண்டு.  குப்தா அப்படித்தான், போராட்டத்தில் வைக்காத கோரிக்கைகளும் கூட சில பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஆகும். தனக்குத் தனியே ஒரு லட்டு வேண்டாம், மாமா–மாமி இருவரும், உங்கள் லட்டில் பாதி தரமாட்டீர்களா என்ன என்று பேச்சுவார்த்தைகளில் சாதுரியமான மருமகள் போல நடந்து கொள்வார்.

எந்த சங்கத்தையும் அவர் விட்டுவிடுவதில்லை.        ஒருமுறை நானும் வங்கத்தின் திலீப் தாஸும் வீட்டு வாடகைப்படி குறித்த நடுவர் மன்றத்தில் சாட்சியம் அளித்துவிட்டு  முன்பு சொன்ன அந்த லட்டை வாங்கிவிட்டுத்தான் திரும்பினோம்.  இரயிலுக்கு நேரமாகிவிட்டது.  குப்தா எங்களை குறுக்கு வழியில் –மிக முக்கியஸ்தர்கள் மட்டுமே செல்லும் சாலையில் – அழைத்துச் சென்றார்.  ஏன் குறுக்கு வழி என்று திலீப் தாஸ் கேட்டார்.  குப்தா சொன்னார்,”நீங்கள் வங்கத்திலிருந்து வந்திருக்கும் மிக முக்கியஸ்தர்”

சென்ட்ரலில் இறங்கிய உடன் ஆர்எம்எஸ் செல்வார்.  ஒருமுறை அங்கே FNTO வினர் கோபத்தில் அவர் முகத்தில் கறுப்பு மையைத் தடவினார்கள்.  உடன் சென்ற எங்களுக்கு மிகுந்த கோபம் – குப்தா எங்களைச் சமாதப்படுத்திவிட்டுக் கூறினார், ’அவர்கள் நான் தான் செய்வேன் என்று நம்புகிறார்கள்.’  அவர்களோடு தொடர்ந்து விவாதித்தார்.  மறுநாள் மிகுந்த மரியாதையோடு அவர்களது ஆர்எம்எஸ் வேனிலேயே அவர்களால் குப்தா வழிஅனுப்பி வைக்கப்பட்டார்.

’யாரையும் ஒதுக்காதே’ என்பது அவர் கற்றுத் தந்த பாடம்.  ஒரு தோழர் வேலைநிறுத்தமே செய்யாதவர்.  பின்னர் மறியலில் என்னோடு வந்தார், பூக்கடை தொலைபேசியகத்தை வேலை நிறுத்தத்தின்போது பூட்டு போட்டு பூட்டினோம். இதைச் சாதிக்க முடிந்ததற்குக் காரணம் குப்தா நமக்கு வழிகாட்டிய போதனை – பொறுமை”.

உரையாற்றியவர்களுக்கு மட்டுமின்றி ஏனைய பொறுப்பாளர்கள் மற்றும் பணியாற்றிய தோழர்களுக்கு மாநில சங்கத்தின் சார்பில் கைத்தறி ஆடை போர்த்தி நன்றி பாராட்டப்பட்டது.  அப்போது மிகச் சுருக்கமாக மேனாள் மாநிலச் செயலாளர் தோழர் . முத்தியாலு,” BSNL தற்போதைய நிலைக்குக் காரணம் 2000 போராட்டத்தின் விளைவு என்று சில தலைவர்கள் ஓய்வூதியக் கூட்டத்தில் கூறியபோது நான், பென்ஷனைப் பாதுகாக்க குப்தா ஆற்றிய பங்கினைக் கூறி உண்மையை எடுத்துக் கூறினேன்.  இரண்டொரு தினங்களில் கடலூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குப்தா பிறந்தநாள் விழாவில் இன்னும் விரிவாக நான் பேசும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வேன்” என்று சுருக்கமாக வாழ்த்துரைத்தார்.  சிறப்பான மதிய உணவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தோழர் முரளிதரன், மாநில உதவி செயலர் நன்றி கூற விழா இனிது முடிவுற்றது.

புத்தகத்தோடு அதில் வைத்துப் பாதுகாக்கப்படும் மயிலிறகாய் விழா நிகழ்வுகள் நெஞ்சில் என்றும் நிறைந்திருக்கும். செய்தித் தொகுப்பு : வெ. நீலகண்டன், கடலூர்