திருப்பு முனையில் நாமும் நம் நிறுவனமும் (டெலிகாம் தலையங்கம்)

திருப்பு முனையில் நாமும் நம் நிறுவனமும்

(டெலிகாம் தலையங்கம்)

BSNL மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம். 1.76 லட்சம் ஊழியர்களும், அக்டோபர் 2000ல் பொதுத்துறையாக மாறியபின் BSNL மூலம் பணியில் சேர்ந்த 39 ஆயிரம் ஊழியர்களும் இதில் பணிபுரிகின்றனர்.  2018 மார்ச் மாதக் கணக்கின்படி நிறுவனத்திற்குச் சொந்தமான ரூபாய் 70 ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலங்களும் ரூ3760 கோடி மதிப்பில் கட்டிடங்களும் உள்ளது.  2014-15, 2015-16 மற்றும் 2016-17 ஆண்டுகளில் நிகழாண்டு செயல்பாட்டு லாபம் ஈட்டியுள்ளது.

தொலைத்தொடர்புத் துறையில் தற்போது நிலவும் கழுத்தறுக்கும் போட்டிச் சூழல் அனைவரும் அறிந்ததே.  இதன் மத்தியிலும் மொபைல் பிரிவில் BSNL வீழ்ந்துவிடாது தாக்குப் பிடித்து நின்றது. BSNL நிறுவனம், டிசம்பர் 2017ல் 4-ஜி அலைக்கற்றை வழங்கிடக் கோரி வரைவுத் திட்டத்தை அனுப்பிய பிறகும்—கோரியபடி 4-ஜி ஒதுக்கீடு செய்யப்படாத நிலையிலும் – ஜனவரி 2019ல் மொபைல் புது இணைப்புகள் 9 லட்சத்து 86 ஆயிரமாக அதிகரித்துச் சாதித்தது. சந்தையில் நமது நிறுவன அந்தஸ்தின் மதிப்பு மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு தனித்துவமானது.   தரைவழி இணைப்புகள் மற்றும் ஃபிராட் பேண்ட் இணைப்புகள் பிரிவில் நாம் பின்தங்கியிருக்கிறோம்.  அதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு.  சாலை அகலப்படுத்தல் மற்றும் முன்னறிவிப்பு இன்றி பிற துறைகளால் பள்ளம் தோண்டி நமது புதைவடக் கம்பிகள் சேதமுறுவது போன்ற காரணங்கள்.  இருந்த போதிலும் இந்தப் பிரிவிலும் தரைவழி இணைப்புகள், அகலக்கற்றை வசதியுடனான இணைப்புகளின் சந்தாதாரர்களைத் தக்க வைத்துக்கொள்ள, போட்டியின் மத்தியிலும் நாம் கடுமையாக முயற்சிக்கிறோம்.

            சந்தேகமில்லாமல் நாம் வரலாற்றின் ”திருப்பு முனை”யில் நிற்கின்றோம்.  தளர்ச்சியில்லாத நம் தொடர் உழைப்பின் பணிக்கலாச்சாரத்தால் நமது நிறுவனத்தை அதன் நெருக்கடியான காலகட்டத்திலும் காத்து நின்றோம்; நெருக்கடியை நம் நிறுவனத்தின் மறுமலர்ச்சியின் திருப்பு முனை ஆக்கிக்காட்டுவோம்.  தற்போதைய மத்திய அரசின் அணுகுமுறை, நமக்குச் சாதகமில்லாது பிரதிகூலமாக எதிர்மறையாக  எதிரிடையாக இருக்கிறது. BSNL நிறுவனத்தின் நிதி ஸ்திரத்தன்மையைத் காப்போம் என்று செப்டம்பர் 2000-ல் நமக்கு உறுதியளித்த மத்தியஅரசு அதை மறந்தே போய்விட்டது.

            நமது நிறுவனம் 4-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை பெற்றிடச் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் என டிஜிடல் கமிஷன் கருதுகிறது.  இந்தப் பிரச்சனை முழுவதும் தற்போது தொலைத்தொடர்பு ஒழுங்காற்றுக் குழு ’டிராய்’–யின் பரிசீலனைக்கு அனுப்பப்பட உள்ளது.  ’டிராய்’ அலைகற்றை எவ்வளவு தேவைப்படும் என்ற ஒதுக்கீட்டு அளவையும், அதற்கான விலையையும் – சில கட்டுப்பாட்டு நிபந்தனைகளுடன் — கண்டறியும் என நம்பப்படுகிறது.   அரசின் தொலைத்தொடர்பு இலாக்காவின் உச்சபட்ச அதிகார அமைப்பு, BSNL மறுகட்டமைப்பு செய்யப்படுவது மிகவும் அவசியமானது எனக் குரல் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. காரணம், மிகக் கேந்திரமான முக்கியத்துவமுடைய இந்தத் துறையில் அரசின் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்பது விரும்பத்தக்கது என கருதுவதேயாகும்.

துரதிருஷ்டவசமாக, மேலே கூறப்பட்ட அனைத்தும் கம்பெனியின் வருவாயுடன் இணைக்கப்பட்ட ஒன்றாகும்.  ஆனால் 2009-10 லிருந்தே வருவாய் இறங்குமுகமாகத் தொடர்ந்து குறைந்து வருகிறது.  இது, தொலைத்தொடர்பு சந்தையில் 2016-ல் ரிலையன்ஸ் கம்பெனியின் ஜியோ வந்ததற்குப் பிறகுதான் மிக மோசமான நிலையை அடைந்தது.  ரிலையன்ஸ் கம்பெனி அரசின் செல்லப் பிள்ளையாக அதன் ஆதரவைப் பெற்றுள்ளது.  பொதுத்துறையாக BSNL உருவானபோது, (2000-ல் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி)  DOT துறையிலிருந்து நிறுவனத்தில் இணைந்த ஊழியர் எண்ணிக்கை, உழைப்பின் சக்தி, சுமார் மூன்றரை லட்சத்திற்கும் மேல்.  அப்போது BSNL நிறுவனத்தின் கடன் – மற்ற எல்லா தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களைவிட – மிகக் குறைவு, ரூபாய் 13 ஆயிரம் கோடி மட்டுமே.  இது எப்படிக் குறைவாகுமென்றால், அப்போது தனியார் நிறுவனங்களின் கடன் அளவு 6.10 லட்சம் கோடி ரூபாயாகும். வருங்காலத்தில் BSNL நிறுவனத்திலிருந்து ஐந்தாறு வருடங்களில் மேலும் 60 ஆயிரம் ஊழியர்கள் இயற்கையாகவே பணி ஓய்வில் சென்றுவிடுவர்.

இந்தச் சூழ்நிலையில்தான், BSNL-க்குச் சொந்தமான ”நிலச் சொத்தை (வருவாய் ஈட்டும் வகையில்) நிர்வகிக்கும் கொள்கை” ஒன்றை BSNL முன்மொழிந்தது.  அதன் மூலம் நாம் பயன்படுத்தாது காலியாக வைத்துள்ள நிலத்தைப் பயனுள்ள வகையில் வாடகைக்கு விட்டோ குத்தகைக்கு விட்டோ அதன்மூலம் வருவாய் ஈட்ட முடியும்.  இது DOT துறையால் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.  இது அனுமதிக்கப்பட்டால் நமது நிறுவனம் ஆண்டு ஒன்றுக்கு மேலும் 7 ஆயிரம் கோடி முதல் 10 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட முடியும்.  ஆனால் திட்டமிட்டு, வேண்டுமென்றே DOT துறை இந்தத் திட்ட முன்மொழிவைச் செயல்பாட்டிற்கு வரவிடாமல் முட்டுக்கட்டை போட்டுத் தடுத்து வருகிறது – BSNL நிறுவனத்தை அழிப்பதைத் தவிர அதற்கு வேறு நோக்கம் எதுவும் இருக்க முடியாது.

  நமது ஊழியர்களே நிர்மாணித்துப் பராமரித்து வந்த BSNL நிறுவனத்தின் செல் கோபுரங்களை இனி வெளி ஏஜெண்டுகள் மூலம் அவுட் சோர்ஸ் செய்து பராமரிக்க நினைக்கிறது நிர்வாகம்.  நிறுவனம் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்துவரும் வேளையில் இவ்வளவு பெரிய தொகையை அவுட் சோர்ஸிங்காகச் செலவிட  எந்தத் தேவையும் இல்லை, நியாயமும் இல்லை. நம் தொடர் உழைப்பு மற்றும் பணிக் கலாச்சாரத்தால் நிறுவனத்தை மீண்டும் பழைய புகழோடு புத்துயிர்ப்பு செய்து ’புதிய திருப்புமுனை’யை ஏற்படுத்த BSNL அனைத்து அதிகாரிகளின் அமைப்புகளும் ஊழியர்களின் சங்கங்களும் பாடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் நமது ஒன்றுபட்ட பெரும் முயற்சிக்குக் குறுக்கே ’நிதி ஆயோக்’, ’டிராய்’, தொலைத்தொடர்பு துறை ஆகியன திட்டமிட்டு செயலாற்றி வருகின்றன.  ஆனால் மிக்க உறுதியோடும் பெருமையோடும் நம்மால் நெஞ்சுயர்த்திச் சொல்லமுடியும், ’அதிகாரிகள் ஊழியர்களின் ஒற்றுமை’ போற்றுதலுக்குரியதாய் தலைமையேற்று நடத்துகிறது.  நிறுவனத்தை மூடிவிடவேண்டும் அல்லது விற்றுவிட வேண்டும் என்ற இன்றைய மத்திய அரசின் மறைமுகத் திட்டத்தை நாம் போராடி வெல்வோம், முறியடிப்போம். 

ஊழியர்களின் உள்ள உறுதியைக் குலைப்பதற்காகக் கட்டாய ஓய்வுத் திட்டம் , விருப்ப ஓய்வுத் திட்டம்,  அதைச் செயல்படுத்த இவ்வளவு செலவாகும் என்றெல்லாம் பல கணக்குகளைச் சொல்லி அரசு மிரட்டப் பார்க்கிறது.  ஆனால் உண்மை என்னவோ பட்டவர்த்தனமாக வெளிப்படையானது : BSNL நிறுவனம் நிதி நெருக்கடியில் இருக்கிறது – அதற்கு முழு பொறுப்பும் காரணமும் மத்திய அரசு கடைபிடிக்கும் கொள்கைகளே —  எந்த வகையிலும் அதற்கு ஊழியர்கள் பொறுப்பாக மாட்டார்கள். இந்த உண்மை மறைக்க முடியாதது.  நம்முடைய ஊழியர்களின் நலன் காக்கப்பட வேண்டுமானால், இந்த நிறுவனம் காக்கப்பட வேண்டும் என்பதை நாமும் நமது ஊழியர்களும் உணர்ந்திருக்கிறோம்.   அத்தகைய ஒரு மாற்றத்தை – திருப்பு முனையை –ஏற்படுத்த, அதற்காகக் கடுமையாக உழைத்திட, நாம் திடசித்தமுடன்  இருக்கிறோம்.  அதற்கானப் போராட்டத்திற்காகக் கூட்டமைப்புச் சங்கங்கள் தொடர்ச்சியாக இணைந்து செயலாற்றுகின்றன.  NFTE பேரியக்கம் எப்போதும் போல் அந்தப் பெரும்படையின் முன்னணியில் நிற்கும் – இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என ஜெய பேரிகை கொட்டி கானரும் வீரர் பெருந்திரள் கூட்டம் செம்பதாகையுடன் முனையிலே முகத்து நிற்பர்.

                                                                                    தமிழில் : வெ.நீலகண்டன், கடலூர்