2019ஜனவரி 8 மற்றும் 9 இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்போம்.

பொதுத்துறை காக்க 2019ஜனவரி 8 மற்றும் 9 இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்போம்.
அன்பார்ந்த தோழர்களே,
வணக்கம். 1991ஆம் ஆண்டு முதல் இந்திய நாட்டில் தொடர்ச்சியான மத்திய அரசாங்கங்கள் கடைபிடித்து வரும் தாராளமய, தனியார்மய, உலகமயமாக்க கொள்கைகளால், பெரு முதலாளிகள் பெருமளவு லாபத்தை அடைந்து தங்களின் சொத்துக்களை அதிகப்படுத்தி வருகின்றனர். மறு புறம் ஏழை எளிய உழைப்பாளி மக்களின் வாழ்க்கை படு பாதாளத்திற்கு சென்றுக் கொண்டு இருக்கின்றது.
பொதுத்துறை வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள மக்களின் பணம் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களால் கொள்ளையடிக்க அனுமதிக்கப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் கடனாகப்பெற்ற பல லட்சம் கோடிகள் திருப்பிச் செலுத்தப்படுவதில்லை. இவர்கள் வங்கிகளில் வாங்கும் கடன்களை மத்திய அரசு வாராக்கடன் என்று அறிவிப்பதுடன், அவ்வப்போது தள்ளுபடியும் செய்துவருகிறது. நாடாளுமன்றத்தின் நடப்புக்கூட்டத்தொடரில் 11.12.2018 அன்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் அளித்துள்ள பதிலில் 2014 முதல் 2017 வரையுள்ள காலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (NDA) கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய 2.41 லட்சம் கோடி ரூபாய்களை தள்ளுபடி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் அதேசமயம் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசியமான உணவு, சுகாதாரம், கல்வி போன்றவற்றிற்கு அளிக்கப்படும் மானியங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருகிறது.
அரசின் தவறான கொள்கைகளால் வேளாண்மைத்துறை பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. அரசின் புள்ளிவிவரங்களின்படி நாட்டில் 1995க்கும் 2014ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் 2,96,438 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதற்கு பிந்தைய புள்ளி விவரங்களை அரசு வெளியிடவே இல்லை. இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறு விவசாயிகள். இது ஒரு பெரும் துயரமாகும். போராடும் விவசாயிகளை அரசு கண்டு கொள்ளாமல் இருக்கும் போக்கினையும் நாம் கண்டு வருகின்றோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (NDA) நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களின் மீது ஈவு இரக்கமின்றி தாக்குதல் தொடுத்துவருகிறது. 1991 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஆட்சியில் இருந்த பல்வேறு அரசுகள் இந்த வகையில் இதுவ்ரை 3.63 லட்சம் கோடி ரூபாய்கள் நிதி திரட்டியுள்ளன. இதில் கடந்த நான்கரை ஆண்டுகள் பதவியில் இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மட்டும் திரட்டிய தொகை 2.1 லட்சம் கோடி ரூபாய்கள் ஆகும்.
சமீபத்தில் பிரெஞ்சு நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் இந்திய அரசு செய்துகொண்ட ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் லிமிடெட் ஓரங்கட்டப்பட்டு, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் அரசுடன் பங்காளியாகச் சேர்க்கப்பட்டுள்ளது. தேசீய ஜனநாயகக் கூட்டணி அரசு பொதுத்துறை நிறுவனங்களின் மீது எந்த அளவு தாக்குதல் தொடுத்துள்ளது என்பதற்கு இவையெல்லாம் உதாரணங்களாகும்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பின்பற்றும் மற்ற நிறுவனங்களை அழித்தொழிக்கும், விலை நிர்ணய கொள்கை காரணமாக தொலைத் தொடர்புத்துறை பெரும் இழப்புக்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மோடி அரசாங்கம் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்திற்கு கொஞ்சமும் வெட்கமோ ஒளிவு மறைவோ இல்லாமல் சேவைசெய்து வருகிறது என்பதற்கு ரிலையன்ஸ் ஜியோவின் இந்த விலைக் கொள்கையை எதிர்த்த காரணத்தால் தொலைத் தொடர்புத்துறையின் செயலாளராக இருந்த திரு J.S. தீபக் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது மிகச்சிறந்த உதாரணமாகும். அதே சமயம் BSNL நிறுவனத்தை ஒழித்துக்கட்ட அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தொலைத்தொடர்புக் கோபுரங்களை நிர்வகிக்க ஒரு துணை நிறுவனம் தொடங்கியுள்ளது. ஆனால் AUABயின் தொடர் போராட்டங்களால் இன்னமும் செயல்பாட்டிற்கு வர இயலவில்லை. தனியார் நிறுவனங்களுக்கு 4G அலைக்கற்றை வழங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேலான சூழலில் இந்திய நாட்டின் பொதுத்துறை நிறுவனமான BSNLக்கு அந்த அலைக்கற்றை இன்று வரை வழங்காமல் உள்ளது. BSNLல் பணியாற்றக் கூடிய ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு BSNL நிறுவனம் தரவேண்டிய ஓய்வூதிய பங்களிப்பு திட்டத்தில் கடந்த பத்தாண்டுகளாக அதிகப்படியான பணத்தை பெற்று வருகிறது. அரசுக்கு செலுத்த வேண்டிய ஓய்வூதிய பங்களிப்பு வாங்கும் ஊதியத்தின் அடிப்படையில் வாங்க வேண்டும் என்கிற மத்திய அரசின் உத்தரவு 2009ஆம் ஆண்டே வெளியிடப்பட்ட பின்னரும் இது வரை BSNL நிறுவனத்திடம் இருந்து ஊழியர்களின் ஊதிய விகிதத்தின் உயர்ந்த பட்ச அளவிலேயே பெற்று வருகிறது. தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் எல்லாம் லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து கடனை வாங்கி இருக்கும் போது, தன்னுடைய சேவையை தொடரவும், விஸ்தரிக்கவும் தேவையான வங்கி கடன்களை பெறுவதற்கு DOT தொடர்ந்து தடை விதித்துக் கொண்டு வருகிறது. இவையெல்லாம் BSNL நிறுவனத்தை சீரழிக்கும் அரசின் நோக்கத்தின் பகுதிகளாகும்.
இவை அனைத்தும் மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் ஆட்சியாளர்களின் பொதுத்துறை விரோத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளின் விளைவுகளே. ஆகவே இவற்றையெல்லாம் எதிர்த்து கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்திய நாட்டு உழைப்பாளி வர்க்கம் 2019 ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விட்டுள்ளன. எனவே நாட்டு நலன் காக்க, நாட்டு மக்கள் நலன் காக்க நடைபெற உள்ள 2019 ஜனவரி 8 மற்றும் 9 இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்தத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என BSNLல் பணி புரியும் ஊழியர்களையும் அதிகாரிகளையும் அறைகூவி அழைக்கின்றோம்.
கோரிக்கைகள்
1) பொது வினியோக திட்டத்தை பலப்படுத்தி, அத்தியாவசிய பொருட்களில் ஊக பேர வர்த்தகத்தை தடை செய்வதன் மூலம் விலை வாசி உயர்வை கட்டுப்படுத்துக!
2) மத்திய மாநில பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்காதே! தனியாருக்கு தாரை வார்க்காதே!
3) வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான உருப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்க!
4) எவ்விதமான விதிவிலக்குமின்றி தொழிலாளர் நலச் சட்டங்களை உறுதியாக அமல்படுத்துக! தவறுபவர்களுக்கு உறுதியான தண்டனை வழங்குக!
5) அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு திட்டத்தை உறுதி செய்க!
6) குறைந்த பட்ச கூலியாக ரூ.18,000/- என நிர்ணயம் செய்க!
7) அனைத்து தொழிலாளர்க்கும் குறைந்த பட்ச ஓய்வூதியத்தை ரூ.3,000/- என்பதை உறுதி செய்க!
8) தொடர்ச்சியான தன்மைகளை கொண்ட பணிகளுக்கு ஒப்பந்தமயத்தை தடுத்து நிறுத்து! நிரந்தர ஊழியர்க்கு இணையான ஊதியத்தை ஒப்பந்த ஊழியருக்கும் வழங்கி விடு!
9) போனஸ், வைப்பு நிதி போன்றவற்றிற்கான வரையறையை நீக்கி விடு! பணிக்கொடையை உயர்த்தி விடுக!!
10) மனு கொடுத்த 45 நாட்களுக்குள் தொழிற்சங்கங்களை அட்டவணைப்படுத்துக!
11) தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தாதே!
12) ரயில்வே, காப்பீடு மற்றும் பாதுகாப்பு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்காதே!

நாட்டின் நலன் காக்க, நாட்டு மக்கள் நலன் காக்க நமது நிறுவனம் காக்க
2019 ஜனவரி 8 & 9ஆம் தேதிகளில் இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்போம்
வாழ்த்துக்களுடன்,
மாநில செயலாளர்கள்
BSNLEU- NFTE- TEPU
தமிழ் மாநில சங்கங்கள்