பிஎஸ்என்எல் வீழ்த்தப்படும் கதை!

பிஎஸ்என்எல் வீழ்த்தப்படும் கதை

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மூன்று வகை நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. புதிய மூலதன நெருக்கடி, நிதிச் சுழற்சி நெருக்கடி, காலத்துக்கேற்ற தொழில்நுட்பக் கொள்முதல் நெருக்கடி. இந்த மூன்றிலிருந்தும் தன்னை மீட்டுக்கொள்ள கடந்த 8 ஆண்டுகளாக பிஎஸ்என்எல் போராடிக்கொண்டிருக்கிறது.

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங் களுக்கு அரசாங்க உதவி கூடாது என தனியார் தொலைத்தொடர்பு பெருநிறுவனங்கள் 2012-ல் எதிர்த்தன. அரசாங்கம் தனது அலைவரிசையை ஏலத்தின் வழியாக மட்டுமே வழங்க வேண்டும் என்கிற உச்ச நீதிமன்ற வழிகாட்டல் வந்த பின்னர், பொதுத்துறை நிறுவனம் தனக்கான அலைவரிசையைப் பெறுவதற்கு ரூ.18,500 கோடியை ஒரே தவணையில் வழங்கி, தன் இருப்பைக் கரைத்துக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டது. அதே நேரத்தில், சில தனியார் பெருநிறுவனங்கள் தாங்கள் அலைவரிசை உரிமம் பெறாத பகுதியிலும் உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டு சேவை தந்து லாபம் சம்பாதித்துக்கொண்டன.

இது தொழில் அல்ல… பொறுப்பு!

தொலைபேசி மட்டுமே இருந்த காலத்தில் ‘நிர்வாக முறை விலை நிர்ணயக் கொள்கை’யை நாடாளுமன்றமே முடிவுசெய்தது. சாமானிய மக்கள் பயன்படுத்திய உள்ளூர் அழைப்புகளுக்கு விலை மிகக் குறைவாக இருந்தது. நடுத்தட்டு மக்கள் பயன்படுத்திய உள்நாட்டு அழைப்புகளுக்குச் சற்று கூடுதலாகவும் உள்ளூர் அழைப்புகளுக்குக் குறுக்கு மானியம் தரக்கூடிய அளவிலும் விலை நிர்ணயிக்கப்பட்டது. உயர்தட்டினருக்கு வெளிநாட்டு அழைப்புக் கட்டணம் கூடுதல் விலையில் இருந்தது.

தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் விலைநிர்ணய முறையைப் புரட்டிப்போட்டன. அனைத்து வாடிக்கையாளர்களும் அவர்கள் எந்தத் தட்டில் இருந்தாலும் பயனாளிகள் என்ற ஒற்றை அளவுகோல் முன்வைக்கப்பட்டு, உள்ளூர் அழைப்புகளுக்கு விலை ஏறி வெளிநாட்டு, உள்நாட்டு அழைப்புகளுக்குக் கட்டண வீழ்ச்சி ஏற்பட்டது. இதில் உலக வர்த்தக நிறுவனத்தின் தலையீடும் இருந்தது.

தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் தரப்பட்டு கழுத்தறுப்பு போட்டிச் சூழல் உருவாக்கப்பட்டது. தொலைத்தொடர்பில் பொதுத்துறை தனது நூற்றாண்டு பாரம்பரிய மரபுரிமையை இழந்தது. சமப் போட்டியாளர் என்ற அந்தஸ்தில் நிறுத்தப்பட்டது. ஆனால், இந்த சமதளப் போட்டி என்ற பேச்செல்லாம் சந்தையில்தான். பொறுப்பில் அல்ல.

வேலைவாய்ப்பு என்பது சமதளப் போட்டிக்கான காரணிகளில் ஒன்றாக மாற்றப்படவில்லை. ஓர் உதாரணம், லட்சக்கணக்கானவர்களுக்கு நிரந்தர வேலையைத் தரும் பொதுத்துறை, அப்படி எந்தக் கடமையும் பொறுப்பும் இல்லாத தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடப்பட்டது. அவ்வப்போது வரும் புதிய தொழில்நுட்பங்களைக் கடனில் பெற்றுக்கொண்டு, சில ஆயிரக்கணக்கான பணியாளர்களைக் கொண்டு சேவை தரும் வாய்ப்புகளை தனியார் நிறுவனங்கள் தொலைதொடர்புத் துறையில் பெற்றன. தங்களின் குறைவான மூலதனத்துடன் வங்கிகளின் மூலதனத்தையே பெருமளவு சார்ந்து இயங்கின. அதன் விளைவுதான், வங்கிகள் இனிமேல் தொலைத்தொடர்புத் துறைக்குக் கடன் தருவது வங்கித் தொழிலுக்கு உகந்ததல்ல என்கிற படிப்பினையைத் தந்திருக்கிறது. பெருநிறுவனங்களும்கூட தொலைத்தொடர்புத் துறையில் நீடிக்க முடியாமல், வீழத் தொடங்கும் கட்டமும் வந்துள்ளது.

பொதுத்துறைக்கு எதிரான யுத்தம்

புதிய நிறுவனம் ஒன்று, அரசின் முழு ஆதரவுடன் நுழைந்து, ஏற்கெனவே உள்ள நிறுவனங்களையும்கூட வீழ்த்தும் கட்டண யுத்தம் தொலைத்தொடர்பில் இன்று பெருமளவு நடக்கத் தொடங்கிவிட்டது. இந்தத் தனியார் யுத்தங்களுக்கு மத்தியில்தான் வங்கியிலிருந்து கடன்பெறாமல் 2 லட்சம் ஊழியர்களுக்கு வேலை கொடுத்துக்கொண்டு புதிய தொழில்நுட்பச் சவாலையும் சந்தித்துக்கொண்டு உலகிலேயே மலிவான விலைக்கு பொதுத்துறை சேவை செய்துகொண்டிருக்கிறது பிஎஸ்என்எல். ஆனால், இனிமேலும் அப்படி நீடிக்க முடியாது.

புதிய தொழில்நுட்ப வளர்ச்சியால் தொலைத்தொடர்புத் துறை தனது முகத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இனி, குரல் அழைப்புகளை நம்பி வர்த்தகம் இருக்கப்போவதில்லை. ‘டேட்டா’ மிகப் பெரும் வர்த்தகப் பகுதியாக வளர்ந்துவருகிறது. உலகம் விரைவில் 5ஜி தொழில்நுட்பச் சேவையின் பலன்களை காணப்போகிறது. இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் 4ஜி சேவையைத் தரத் தொடங்கி 24 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுவிட்டன. விரிவாக்கம் வேண்டும் என்பதும், புதிய தொழில்நுட்பம் வேண்டும் என்பதும்கூட பிஎஸ்என்எல் தொழிலாளர் போராட்டக் கோரிக்கைகளில் ஒன்றாக இருக்கிறது.

‘டேட்டா’ வாணிபத்துக்குத் தேவைப்படும் அலைவரிசை பெறுவதில் பிஎஸ்என்எல் வழக்கம்போல் காக்கவைக்கப்படுகிறது. ஓட்டப்பந்தயம் துவங்கி தனியார் நிறுவனங்கள் பல மைல்கள் ஓடிவிட்டன. 4ஜி சேவைக்குரிய அலைவரிசையையே இனிதான் பிஎஸ்என்எல் பெற வேண்டும். இது நியாயமே அல்ல. பிஎஸ்என்எல் தனக்கும் 4ஜி-க்குரிய அலைவரிசை 2100 மெகா ஹெர்ட்ஸைத் தர வேண்டும் என அரசுக்கு விரிவான திட்ட அறிக்கையைக் கடந்த 2017 டிசம்பரில் அளித்தது. இன்னும் அந்த அறிக்கைக்கு அரசாங்கம் உரிய கவனத்தைக் கொடுக்கவில்லை.

தனியாருக்கு மட்டுமே அரசு ஆதரவு

பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது மூலதனத்துடன் புதிய மூலதனம் சேர்க்காமல் தொழில் நடத்த முடியாத நிலையில் இருக்கின்றன. பிஎஸ்என்எல் அப்படிப் புதிய மூலதனத்தையும் கடந்த 18 ஆண்டுகளில் ஒருமுறைகூட அரசிடமிருந்து கேட்கவில்லை. அப்படியிருந்தும், 4ஜி அலைவரிசையில் மாநிலம் ஒன்றுக்கு 5 மெகாஹெர்ட்ஸ் என்ற அளவில் மொத்தமாக 105 மெகாஹெர்ட்ஸ் தர வேண்டும் என்கிற பொதுத்துறையின் கோரிக்கை நிறைவேற்றப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அதற்குரிய தொகையை தவணை முறையில் செலுத்தத் தயார் என்று பிஎஸ்என்எல் என்று சொல்லிய பின்னும் அரசு அந்தக் கோரிக்கையைக் கண்டுகொள்ளவே இல்லை. ஏன்?

அடக்க விலையைக்கூட ஈடுகட்ட முடியாத, கொள்முதலே செய்ய முடியாத, விரிவாக்கமில்லாத வர்த்தகச் சூழல் பொதுத்துறை தொலைத்தொடர்பின் மீது வலிந்து திணிக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமாக பிஎஸ்என்எல் பெற்றிருந்த லேண்ட்லைன் எனும் தரைவழி அழைப்புக் கொள்கையும் தனியாருக்குச் சாதகமாக மாற்றப்பட்டுள்ளது. ஊரக மற்றும் நஷ்டம் வரும் சேவைகளுக்கு மானியம் தருவதாக ஏற்றுக்கொண்ட அரசு, மூன்றே ஆண்டுகளில் அதை நிறுத்திக்கொண்டுவிட்டது.

கடன் வலையிலிருந்து தப்பிக்க 100% அந்நிய நேரடி முதலீடுகளைத் தனியார் நிறுவனங்கள் நிர்ப்பந்தப்படுத்திப் பெற்றுக்கொண்டன. அவர்களுக்கு ஏதோ ஒருவகையில் மூலதனப் பற்றாக்குறை சரிகட்டப்படுகிறது. ஆனால், பிஎஸ்என்எல் மூலதனப் பற்றாக்குறையுடன், குறைந்த கட்டண வருவாயுடன், லட்சக்கணக்கான ஊழியர்களுக்கான ஊதியச் செலவுடன் போட்டிக்களத்தில் நின்று சமாளித்துவருகிறது. இயற்கைப் பேரிடர் காலங்களில் மட்டுமே பொதுத்துறை தொலைத்தொடர்பின் அவசியம் மக்களின் கண்களுக்குத் தெரிகிறது. தொலைத்தொடர்புத் துறையில் எப்போதுமே பொதுத்துறைக்கு ஒரு முக்கியமான பங்கு இருந்தால், நாட்டின் பாதுகாப்புக்கும், சமூகப் பொருளாதாரத்துக்கும் அவை எவ்வளவு பங்களிக்க முடியும் என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியாதிருக்குமா என்ன?

– ஆர்.பட்டாபிராமன், பிஎஸ்என்எல் தொழிற்சங்கத் தலைவர், TAMIL HINDU 03/12/2018

தொடர்புக்கு: pattabieight@gmail.com