BSNLக்கு பணி செய்து பட்டினி கிடப்பதா?

அன்புள்ள தோழர்களே,
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, மாதம்தோறும் 7ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவு. இதனை உத்தரவாதப்படுத்த வேண்டும் என BSNL கார்ப்பரேட் அலுவலகமும் அனைத்து தலைமை பொதுமேலாளர்களுக்கும் ஏகப்பட்ட கடிதங்களை எழுதியுள்ளது. ஆனால் அது எங்கும் அமலாவதில்லை. தமிழகத்திலும் பல மாதங்களாக தாமதமாக பல மாவட்டங்களில் ஊதியம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் தலைமை பொதுமேலாளர் உள்ளிட்ட பல அதிகாரிகளிடம் பல முறை பேசிய பின்னரும் நிலைமை சரியாகவில்லை.
காலதாமதமாக வந்த ஊதியம் கடந்த சில மாதங்களாக சுத்தமாகவே வராமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூன் மாத ஊதியம் கூட இன்னமும் வழங்கப்படாமல் உள்ளது. இதற்காக பல கட்ட போராட்டங்களை அந்த மாவட்ட சங்கம் நடத்தியுள்ளது. இது தொடர்பாக பலமுறை பேசியும் பயனில்லாமல் உள்ளது. ஜூலை மாத ஊதியம் என்பது இன்னமும் பத்து மாவட்டங்களில் கொடுக்கப்படாமல் உள்ளது. கடந்த மாதம் இந்த மாவட்ட சங்கங்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் நிர்வாகம் கண்டும் காணாமல் உள்ளது. சில பேர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். இன்று வரை அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.
செப்டம்பர் 14ஆம் தேதி ஆன பின்னரும் கடலூர் மாவட்டம் தவிர வேறு எந்த மாவட்டத்தில் உள்ள ஒப்பந்த ஊழியருக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை. மூன்று மாத ஊதியம் வரவில்லை என்றாலும் தொடர்ந்து வேலை செய்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களின் BSNL மீதுள்ள பாசத்தை நிர்வாகம் தனது சுரண்டலுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றது.
இது தொடர்பாக BSNLEU, NFTE, TNTCWU மற்றும் NFTE ஒப்பந்த தொழிலாளர்கள்     மாநில சங்கங்களின் சார்பாக 10.09.2018 அன்று தமிழகத்தில் அனைத்து கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆனாலும் அதில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.
எனவே தமிழ் மாநில BSNLEU, NFTE, TNTCWU மற்றும்  NFTE ஒப்பந்த தொழிலாளர்கள்  மாநில சங்கங்கள் சார்பாக 17.09.2018 அன்று காலை முதல் ஊதியம் வராத மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட பொது மேலாளர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தினை நடத்திட வேண்டும் என அறைகூவல் விட்டுள்ளன.
BSNLஐ பாதுகாக்க அல்லும் பகலும் பாடுபடும் ஒப்பந்த தொழிலாளியையும் அவர்களின் குடும்பத்தையும் பட்டினி போடும் நிர்வாகத்தின் கண்களை திறக்கச் செய்வோம். நமது ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைக்காமல் நாம் ஓய மாட்டோம். அனைவரையும் அணி திரட்டுவோம். சக்தியாக போராடுவோம். வெற்றி பெறுவோம்.