நிலைத்த ஆட்சி! வளமான ஆட்சி! நேபாள் இலக்கு! ஆர்.பட்டாபிராமன்

நிலைத்த ஆட்சி! வளமான ஆட்சி! நேபாள் இலக்கு!
ஆர்.பட்டாபிராமன் COURTESY -JANASAKTHI -31/12/2017.
நேபாளம் மன்னராட்சியை எதிர்த்து பெரும் போராட்டங் களை நடத்தி ஜனநாயக முறைக்கு திரும்பிய நாடு.  ஆனால், அப்பெரும் உள்நாட்டுப்போரில் 17000 உயிர்ப்பலிகளும் பலர் சித்திரவதைகளுக்கு உள்ளாகி தியாகம் நிறைந்த வரலாறும் அடங்கியுள்ளது. 1996-2006 ஆண்டுகள் சிவில் உள்நாட்டு யுத்த காலமாக பார்க்கப்படுகிறது. 2008லிருந்து மன்னராட்சி என்கிற முடியாட்சி முற்றிலுமாக அகற்றப்பட்டு நாடாளுமன்ற ஜனநாயகம்  உருவானாலும் முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சி என்பது அங்கு பெரும் சவாலாகவே இருந்து வந்தது. அரசியல் நிலைத்தன்மை என்பது 2017 தேர்தலில் எதிரொலித்தது. புதிய அரசியல் சாசனம் 20 செப்டம்பர் 2015  அன்று நடைமுறைக்கு வந்து நேபாளம் சமயசார்பற்ற, ஜனநாயக கூட்டாச்சி குடியரசு நாடு என அறிவிக்கப்பட்டது.
இந்தியா போலவே அங்கும் மக்களவை 275, தேசிய அசெம்பிளி என்கிற மேலவை 59 உறுப்பினர்கள் என்கிற வடிவம்  இருக்கிறது. மாகாண இடங்கள் 550 என்பதில் 330க்கு நேரடி தேர்தலும் மீதி இடங்களுக்கு விகிதாச்சார அடிப்படையும் ஏற்கப்பட்டுள்ளது. அங்கு மத்திய மாநில தல என்கிற மூன்று அடுக்கு ஆட்சிமுறை நிலவுகிறது. அனைத்துமட்டங்களிலும் மூன்றில் ஒருபங்கு பெண்களுக்கு ஒதுக்கீடு என்பது ஏற்கப்பட்டுள்ளது. விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்பதில் சமூக தன்மை கொண்டதாக தலித்கள், ஜனஜாதி பூர்வகுடிகள், சிறுபான்மையினர் பிரதிநிதிகள் இடம்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் 275 இடங்களில் முதல்நிலை வாக்குகளை பெற்று தேர்ந்தெடுக்க முடிந்த இடங்கள் 165. மீதமுள்ள 110 இடங்கள் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இம்முறை நாடாளுமன்ற இடங்களுக்கு 1663 வேட்பாளர்கள் களம் இறங்கியிருந்தனர். 2017 தேர்தலுக்கு 1.54 கோடி வாக்காளர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தகுதியாயினர். நவம்பர் 26 மற்றும் டிசம்பர் 7  ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக 165 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 7 பிராவின்ஸ் எனப்படும்  பிரதேசங்களில் நேரடி தேர்தல் 165 இடங்களிலும் மாகாண தேர்தல் 330 இடங்களுக்கும் ஒருசேர நடந்தது. 77 மாவட்டங்களை இந்த பிரதேசங்கள் பெற்றுள்ளன. ஒவ்வொரு வாக்காளருக்கும் இரு வாக்கு சீட்டுகள் நேரடி தேர்தல், விகிதாச்சார தேர்தல் என்கிற வகையில் கொடுக்கப்பட்டிருக்கும். மூன்றுசத வாக்குகளை விஞ்சும் கட்சிகளுக்கு மட்டுமே விகிதாச்சாரத்தில்  இடம் என்பது கிடைக்கும்.
காத்மண்டுவில் 10 தொகுதிகள், மொராங்கில் 6, ஜபா, ரூபந்தேகி, கைலாலி பகுதிகளில் தலா 5 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. தராய் மாவட்டங்கள் எனப்படும் 20 மாவட்டங்களில் 78 தொகுதிகள்  உள்ளன. அங்குதான் நேபாளின் சரிபாதி மக்கள் வாழ்கிறார்கள். மாதேஷ் கட்சிகள் பகுதிகளாக அவை கருதப்படுகின்றன. 9 பெரிய மாவட்டங்கள் தலா 4 தொகுதிகளையும், அடுத்த 5 மாவட்டங்கள் தலா மூன்று தொகுதிகளையும், 21 மாவட்டங்கள் தலா 2 தொகுதிகளையும். 35 மாவட்டங்கள் ஒரு தொகுதி மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
நேபாளில் 77  மாவட்டங்களில் 753 கிராம முனிசிபல் நிர்வாக  தலமட்ட அரசாங்கம்  என்கிற தல நிர்வாகத்திற்கு வழிவகை செய்துள்ளனர். 2015ல் ஏற்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் பிஸ்கல் பெடெரலிசம் என பேசுகிறது. இதன் மூலம் தலமட்ட, மாநில அரசாங்கங்கள் தங்கள் பட்ஜெட்களை போட முடியும். ஆனாலும் நிதி ஆதாரங்களுக்கு அவை மத்திய அரசை நம்பித்தான் செயல்படும்வகையில் நிலை இருக்கும். அங்கு பெரிய கட்சிகள் என அறியப்படுபவை  நேபாள் கம்யூனிஸ்ட் கட்சி யு எம் எல்,  நேபாள் கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்ட், நேபாளி காங்கிரஸ், ராஷ்டிர பிரஜாதந்திரி, நேபாள் சத்பாவனா, ராஷ்ட்ரிய ஜனதா தல், பெடெரல் சோசலிஸ்ட், புதிய சக்தி  போன்றவைதான்.
தற்போது முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கூட்டணியான யு எம் எல் மற்றும் மாவோயிஸ்ட் மையம் பெரும்பான்மை இடங்களை பிடித்துள்ளன.  விகிதாச்சார பிரதிநித்துவம் 110 இடங்கள் நீங்கலான நேரடி 165 இடங்களில் கட்சிவாரியாக நமக்கு கிடைக்கப்பேறும் தகவல்களின் அடிப்படையில் யு எம் எல் 80, மாவோயிஸ்ட் 36,  காங்கிரஸ் 23 ,ஆர் ஜே பி 11 , சோசலிஸ்ட் 10 , ஆர் பி பி 1, புதிய சக்தி 1 ,ஜனமோர்ச்சா1 மஸ்தூர் கிசான் 1 , சுயேட்சை 1 என பெற்றுள்ளன. விகிதாச்சார அடிப்படையில் முதல் மூன்று இடங்களை யு எம் எல், காங்கிரஸ், மாவோயிஸ்ட் பெற்றுள்ளனர். வருகிற புத்தாண்டில் ஜனவரியில் யு எம் எல் தலைவர் கே பி ஒளி தலைமையில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சி அமைய இருக்கிறது.
ஒன்றுபட்ட மார்க்சிய லெனினிய கட்சி என்கிற யு எம் எல் கம்யூனிஸ்ட் தலைவர்  கே பி ஒளி வளர்ச்சி
குறித்து குறிப்பாக ரயில்வே
கட்டுமானம், ஏர்போர்ட், நீர்மின்சாரம் வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை முன்வைத்து தன் கட்சியை தேர்தலில் வழிநடத்தினார். கே பி ஒளி 18 மணி மின்வெட்டு என்கிற பிரதான பிரச்சினையில் கவனம் செலுத்தினார். இந்தியாவின் மறைமுக பொருளாதார தடைகளை எதிர்த்து குரல் கொடுத்து மக்களிடம் செல்வாக்கை உயர்த்திக்கொண்டார். இம்முறை சந்தேகங்களை யெல்லாம் போக்கும் வகையில் இரு கம்யூனிஸ்ட் கட்சியினரும்  இணைந்துநின்று வாக்குகளை சரியாக பயன்படுத்திக்கொண்டனர்.
இரு கட்சிகளுக்கும் இடையில் யு எம் எல் சொல்லும் மதன் பண்டாரி பாதையான  பலகட்சி மக்கள் ஜனநாயக பாதையா (ஜீமீஷீஜீறீமீ’s விuறீtவீ ஜீணீக்ஷீtஹ் ஞிமீனீஷீக்ஷீணீநீஹ்)  அல்லது  பிரசந்தா பாதை என்கிற மாவோயிஸ்ட் சொல்லும் மார்க்சிய லெனினிய மாவோ பாதையா என்கிற கொள்கைபூர்வ விவாதம் இருப்பதால் இரு கட்சிகளும் ஒன்றுபடுமா என்கிற கேள்விக்கு  நடைமுறை பதிலை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டிய நிலை இருக்கிறது. இரு சக்திகளும் அதிகாரங்களை எப்படி பகிர்ந்து கொள்வார்கள். கட்சி அணியினர் இணக்கம் எவ்வாறு இருக்கப்போகிறது என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது….
இடதுசாரி அணிசேர்க்கை யில் அமைய இருக்கும் அரசிற்கு வளர்ச்சிதிட்டங்கள் பெரும் சவாலாக அமையும். மாதேசிகளின் பிரச்சினையை முடிவிற்கு கொணரவேண்டிய கடமையுமிருக்கிறது. 2008 தேர்தலில் ஒட்டுமொத்தமாக இடதுசாரிகள் அங்கு 62 சத வாக்குகளை பெற்றனர்.
2013ல்பல கருத்து வேறுபாடு களுக்கு இடையிலும் அவர்கள் 52 சதம் பெற்றனர். தற்போது இடது கூட்டணி நிலையான ஆட்சி என்கிற நம்பிக்கையை தந்துள்ளது.. நிலைத்த ஆட்சி- வளமான ஆட்சி என்பதை வாக்குறுதிகளாக மக்கள் பெற்றுள்ளனர். 10 ஆண்டுகளில் 15000 மெகாவாட் மின் உற்பத்தி என்பது பெரும் வாக்குறுதியாக பார்க்கப்படுகிறது. கிராம முன்னேற்றம், தொழில்புரட்சி, வேலை வாய்ப்புகள் என்பவை பேசப்பட்டுள்ளன. இடதுசாரி அரசாங்கமே ஆனாலும் நிறைவேற்றுவதற்கு சற்று கடினமான வாக்குறுதிகள்தான் இவை என விவரம் அறிந்தவர்கள் அங்கு கருதுகின்றனர். அனைத்தையும்விட அண்டை பெரும் நாடுகளான சீனா மற்றும் இந்திய உறவில் சரிநிலை உருவாக்குவது பெரும் சவாலாக அமையும். கே பி ஒளி சீனா சார்பானவர் என்கிற கருத்தும் பலமாக இருக்கிறது.
நேபாளில் 2.8 கோடி மக்கள் தொகை  இருப்பதாக 2015 கணக்கெடுப்பின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் 1.35 கோடி பெண்கள் 1.45 கோடி. மதவகைப்பட்டு இந்துக்கள் 81 சதம், முஸ்லீம்கள் 4 சதம் , புத்தமதத்தினர் 9 சதம், கிறிஸ்துவர் 1.5 சதம் என காட்டப்பட்டுள்ளது. நேபாளில் 35 இனக்குழுக்கள் இருக்கின்றன. தலித்கள் என்பதிலும் 20க்கும் மேற்பட்ட பிரிவுகள் சிறுபான்மையினர் என வைக்கப்பட்டுள்ளனர். மாதேசிகள், பெண்கள் ஆகியோரும் மைனாரிட்டி என்ற பிரிவில் வருகின்றனர். சிறுபான்மையினர் எனப்படுகிற முஸ்லீம் மற்றும் மாதேசி பிரச்சினைகளில் முழுமையான விவாதம் தீர்வுகள் எட்டப்படவேண்டிய அவசியமுள்ளன.  நீதிமன்றங்கள், போலீஸ், அரசாங்க பதவிகளில் உயர்சாதிக்களின் ஆதிக்கம் என்கிற பிரச்சினை அங்கு நிலவுகிறது.
ஊழல் கண்காணிப்பு ஒழிப்பு நடைமுறைகளுக்கான நிறுவன நடவடிக்கைகளில்  கவனம் தேவைப்படுகிறது. வெளிநாட்டுகொள்கையில் இணக்கமான கருத்தொற்றுமை கட்சிகளுக்குள் நிலவும் வகையில் உள்விவாதங்கள் மேம்படவேண்டிய தேவையும் இருக்கிறது.
நேபாள காங்கிரசைவிட இடதுசாரிகளின் ஜனநாயக
உறுதிப்பாடு நம்பிக்கைக் குரிய ஒன்றாகவே நேபாளில்
இம்முறை பார்க்கப்பட்டுள் ளது. அதே நேரத்தில் தலைக்கனம் கொண்ட இடதுசாரி தலைமை என்கிற  எச்சரிக்கையை அங்குள்ள சில பத்திரிகைகள் சொல்லத்துவங்கியுள்ளன. நாட்டின் புகழ்வாய்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் குறிப்பாக ஒளியோ பிரசந்தாவோ  இதற்கு இடம் தராமல் இருக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பை  அங்குள்ள அறிஞர்களின் பேட்டிகளில் நாம் பார்க்க முடிகிறது. நேபாள காங்கிரசில்
உள்ள சில திறமையான தலைவர்களின் ஆலோசனை யை கூட கேட்டு முடிவெடுத்து நடந்தால் வளர்ச்சிப்பாதை சாத்தியம்தான் எனவும் அறிவுரைகள் தரப்படுகின்றன.
நிலைத்த ஆட்சி வளமான ஆட்சி என்பதை கம்யூ னிஸ்ட்கள் தந்தால் அண்டை நாடுகளில்  அதன் தாக்கத்தை நாம் உணரலாம்.