ஒப்பில்லாத் தலைவர் & ஓம் பிரகாஷ் குப்தா அ.சோமசுந்தரம்

ஒப்பில்லாத் தலைவர் & ஓம் பிரகாஷ் குப்தா
அ.சோமசுந்தரம் POSTAL LEADER -COURTESY JANASAKTHI 31/012/2017
“என்ன கொடுத்தும் ஒற்றுமை! என்னையே கொடுத்தும் ஒற்றுமை என்பதை வாழ்வின் நோக்கமாகக் கொண்டு, 66 ஆண்டுகள் இந்திய தபால் தந்தி தொலைபேசி ஊழியர் தொழிற்சங்க இயக்கத்தையும், மத்திய அரசு ஊழியர் இயக்கத்தையும் முன்னெடுத்துச் சென்ற அருமைத் தோழர் ஓம்பிரகாஷ் குப்தா 05.01.2013ல் மறைந்தார். ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. அவரது தொண்டு என்றென்றும் மறக்க இயலாதது. இன்றைய தலைமுறையினர் பலரும் அறியாத அரிய தகவல்கள் பல.
இரண்டாம் உலகப் போரின் இறுதி நாட்களான 1944 – 45ல் குப்தா, தில்லி ராணுவ தலைமை அலுவலகத்தில் தற்காலிக ஊழியர். அங்கு ஊழியரிடையே தொழிற் சங்க உணர்வு ஊட்ட முயன்று பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஏஐடியூசி தலைமை அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டு இருந்தார். உலகப்போரின் விளைவாக இந்திய நாடு சுரண்டப்பட்டு கடும் விலைவாசி உயர்வு. ஆங்கில அரசின் மத்திய சட்டமன்றத்தில் அரசின் தீர்மானம் தோல்வியுற்று 10.5.1946ல் முதல் ஊதியக்குழு அமைக்கப்பட்டது.
எனினும், ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைவராகவும், லண்டனில் நேருவுடன் சட்டம் பயின்ற வழக்கறிஞர் தால்வி பொதுச் செயலாளராகவும் இருந்த அகில இந்திய தபால்காரர்கள், கடைநிலை ஊழியர் சங்கம் 11.07.1946 முதல் 03.08.46 வரை 23 நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்தது. மூன்றாம் பிரிவு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் காம்ப்ளே வேலை நிறுத்தத்திற்கு எதிராக அறிக்கை வெளியிட்டு பதவி விலகினார். சங்கத் தலைவர் தாதாகோஷ் என்று அழைக்கப்பட்ட பூபேந்திர நாத் கோஷ் கல்கத்தாவில் 29.07.46ல் பொது வேலைநிறுத்தம் செய்தார். பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு வெளியார் ஒருவரை நியமிக்க விரும்பி ஏஐடியூசி துணையை நாடினார். அங்கு பணியாற்றிய இளைஞர் ஓம்பிரகாஷ் அவரைக் கவர்ந்தார். அவரை 6 மாத தற்காலிக பொதுச் செயலாளராக நியமித்தார். தொழிற்சங்க தலைமையகத்தில் கோப்புகள் மலைபோல் குவிந்து இருந்தன. “எனக்கு என்ன வேலை” என்று கேட்டார். இதை எல்லாம் நீதான் பார்க்க வேண்டும் என்றார் தாதா. எனக்கு இந்த மாதிரி வேலை தெரியாது. நான் “போராளி” என்றார் குப்தா. “யாராவது ஒரு முட்டாள் இந்த வேலையை செய்ய வேண்டும். அதை நீ செய்” என்றார் தாதா. தனது வாழ்நாள் முழுமையும் அதனை மீண்டும் மீண்டும் சொல்லி மகிழ்ந்தார் குப்தா. அப்போது அவருக்கு வயது 25. வாட்டசாட்டமாக ஓங்கி உயர்ந்த உருவம். தாதா சொன்னார் யாரும் உன் வயதைக் கேட்டால் 30 என்று சொல்; இந்தியாவில் தபால் தந்தி ஊழியர்கள் பிளவுபட்டு உள்ளனர். அவர்களிடையே ஒற்றுமையை உருவாக்குவதே உன் வேலை என்றார்.
தொழிற்சங்கத் தலைவர்கள்
ஊதியக்குழுவின் முன் முரண்பாடான கோரிக்கைகளை வைத்தனர். ஊதியக் குழுவில் தொழிலாளர் பிரதிநிதியாக இருந்த ஏஐடியூசி தலைவர் என்.எம்.ஜோஷி ஓம்பிரகாசையும், மற்றொரு சங்க செயலாளர் கே.ராமமூர்த்தியையும் அழைத்து ஒன்றுபட்டு செயல்பட வலியுறுத்தினார். எதிரும், புதிருமான இவர்கள் ஒன்றுபட்டனர். ஒரே ஆண்டில பல சங்கங்களை ஒன்றிணைத்தனர். இந்தியா, பாகிஸ்தான் என்று இந்திய நாடு பிளவுபடுவதற்குமுன் 13.08.1947ல் என்.எம்.ஜோஷி தலைவர், டி.டி.கிருஷ்ணமாச்சாரி துணைத் தலைவர், ஓம்பிரகாஷ் குப்தா பொதுச் செயலாளர், கே.ராமமூர்த்தி துணைப் பொதுச்செயலாளர் என்று யூபிடிடபிள்யூ என்ற அமைப்பு உருவானது.
ஆங்கிலேயர் ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊதியக்குழு வின் பரிந்துரைப்படி கிராக்கிப்படி வழங்க பிரதமர் நேருவின் சுதந்திர அரசு மறுத்தது. மீண்டும் வேலைநிறுத்தம் செய்ய தபால் தந்தி ஊழியர்கள் முனைந்தனர். வேலை நிறுத்த வாக்கெடுப்பு நடத்தும் முன் பிரதமர் நேருவை சந்திக்க விரும்பினர். ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் தால்வி, குப்தா மற்றும் பலர் சந்தித்து, கிராக்கிப்படி வழங்க வேண்டினர். இங்கிலாந்தில் தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளித்த நேருவின் முந்தைய நிலையை எடுத்துக் காட்டினர். “ஐந்து ரூபாய் கொடுக்கக்கூட நாட்டின் நிதிநிலை இடம் தராது”. அன்று நான் போராளி இன்று நான் நிர்வாகி என்று பதிலளித்தார். தனது இயலாமையை தெரிவித்து தொழிற்சங்க இயக்கத்தில் இருந்து விலகி, தலைவர் பதவியை ஜெயப்பிரகாஷ் ராஜினாமா செய்தார்.
சுதந்திர இந்திய அரசுக்கு எதிராக தபால் தந்தி ஊழியர்களின் வேலை நிறுத்த அறிக்கை வழங்கப்பட்டது. அரசு செக்யூரிட்டி ஆப் நேஷனல் சர்விஸ் ரூல்ஸ் மற்றும் டிபன்ஸ் ஆப் இந்தியா ரூல்ஸ் என்ற ஏகாதிபத்தியத்தை தடைசெய்தது அன்றைய மதராஸ் நகரில் நடக்க இருந்த மாநாட்டிற்கு வரும் வழியில், ஓம் பிரகாஷ் குப்தாவும் நூற்றுக்கணக்கான தோழர்களும் 22.02.1949ல் கைது செய்யப்பட்டனர். 15.11.49ல் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் 08.12.49ல் கைது செய்யப்பட்டார். மாநாட்டில் கூடியவர்கள், குப்தா மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றி, வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொண்டனர். சென்னை சிறையில் இருந்த குப்தாவுக்காக “கருணை மனு” போட்டு விடுதலைக்கு வழிகோலினார் செயலாளர் கே.ராமமூர்த்தி. சிறையில் 1950ல் இருந்து விடுதலையான குப்தாவிடம் 1000 ரூபாய் கொடுத்து மீண்டும் அவரை பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டினார். குப்தா மறுத்துவிட்டார். அதற்கு அடுத்து நடந்த மாநாட்டை அம்பலா நகரில் நடத்தினார். குப்தாவுடன் தொழிற்சங்கத்தில் பணியாற்றிய ‘ஜனக்‘ கை திருமணம் செய்து கொண்ட வரவேற்பு நிகழ்வாகவும் அது அமைந்தது.
அம்பாலா மாநாட்டில் மீண்டும் குப்தா பொதுச் செயலாளராக வேண்டும் என்று சிலர் விரும்பினர். சிலர் அஞ்சினர். இரு எதிர் எதிர் துருவங்கள் என்று கருதப்பட்ட ராமமூர்த்தியுடன் இணைந்து 1954 வரை துணைப் பொதுச் செயலாளராகப் பணியாற்றி, பிளவுபட்ட பல சங்கங்கள் ஒன்றுபட தொடர்ந்து முயன்றார். இந்திய நாட்டின் முதல் பொதுத் தேர்தல் 1952ல் நடைபெற்றது. இரு துருங்களும் இணைந்து கர்ன்மெண்ட் எம்பிளாயிஸ் இன்ட்ரஸ்ட் புரடெக்ஷன் ஆர்கைனைசேஷன் என்ற அமைப்பை உருவாக்கி அதன் பிரதிநிதியாக தோழர் ஓம்பிரகாஷை டில்லி தொகுதி ஒன்றில் வேட்பாளராக நிறுத்தினர். முன்மொழிந்தது ராமமூர்த்தியின் மனைவி முத்துலெட்சுமி. வழிமொழிந்தது பொருளாளர் வாரியம் சிங்கின் மனைவி. அரசு ஊழியர்கள் மத்தியில் பிரச்சாரம் சோசலிஸ்ட் கட்சியின் தலைவரான சுசேதா கிருபளானி வென்றார். குப்தாவின் பணயத்தொகை பறிபோனது. பின்னர் கோவிந்த வல்லப பந்த் உள்துறை அமைச்சரானார். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.கே.தங்கமணி மத்திய அரசு ஊழியர் கோரிக்கை பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலாக ‘பந்த்’, இந்தக் கோரிக்கைகளை வைத்துப் போட்டியிட்ட உங்கள் ஆளுக்கு பணயத்தொகை பறிபோனதே” என்றார். “ஆம், எங்கள் வேட்பாளரின் பணயத்தொகை பறிபோனது. ஆனால் உங்கள் அமைச்சர் அங்கே போட்டியிட்டுத் தோற்றார். அவர் தனது தொகுதியையும் இழந்தார். மந்திரி பதவியும் போயிற்றே” என்றார் கே.டி.கே.
இந்திய தபால் தந்தித் துறை அமைச்சர்களாக இருந்த ரஃபி அகமத் சித்வாய், பின்பாபு ஜெகஜீவன் ராம் ஆகியோரின் ஒத்துழைப்பால், ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் என்ற கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு விபிடிடபிள்யூ இடைவிடாமுயற்சியால் 24.11.1954ல் என்எப்பிடிஇ சம்மேளனம் உருவானது. தொலை பேசி பொறியியல் மூன்று, அஞ்சல் பிரிப்பக நான்காம் பிரிவு என இரு அகில இந்திய சங்கங்களின் பொதுச் செயலாளராக குப்தா தேர்வு செய்யப்பட்டார். குப்தாவின் குருநாதர் பூபேந்திரநாத் கோஷ் ஒன்பது சங்கங்கள் இணைந்த சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனார். மீண்டும் 1957ல் 2வது ஊதியக்குழு அமைக்கக்கோரி வேலை நிறுத்த முனைப்புகள் தாதா கோஷ் நீடித்தால் பழிவாங்குதல் அதிகம் இருக்கும் என்பதால் பதவி விலக நேர்ந்தது. முதல் ஊதியக்குழுவின் பின் இன்றுவரை ஊதியக்குழுக்களில் தொழிலாளர்கள் பிரதிநிதியாரும் இடம்பெறவில்லை.
1960 ஜூலை 12ல் “பைவ் குளோரியஸ் டேஸ்”
என்று இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் தலைவர் எஸ்.ஏ.டாங்கேவால் பாராட்டப்பட்ட மத்திய அரசு ஊழியர் வேலை நிறுத்தம் நடைபெற்றது. தோழர்கள் குப்தா, ராமமூர்த்தி, ஞானையா, பிரமநாதன் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் கைது. எசன்ஸ்யல் சர்விஸ் மெயிண்டனன்ஸ் ஆர்டினன்ஸ் பிறப்பிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் கடும் தண்டனைகளுக்கு ஆளாயினர். 1965ல் தோழர் ஞானையா சம்மேளனப் பொதுச் செயலாளரான பின் குப்தாவுடன் இணைந்து, மத்திய அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தை தவிர்க்க இங்கிலாந்து நாட்டில் வொயிட் கவுன்சில் போன்ற அமைப்பு உருவாக முனைந்தனர். அப்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த குல்ஜாரிலால் நந்தா நல்லெண்ணத்தால் ஜயின்ட் கன்சாலிடேட்டிவ் மெசினரி என்ற 60 தொழிலாளர்கள் பிரதிநிதிகள், அனைத்து அதிகாரிகள் கொண்ட கூட்டு ஆலோசனைக்குழு நிறுவப்பட்டது. ஆனால் அது தொடர்ந்து செயல்படாவண்ணம் முடக்கப்பட்டு வருகின்றது.
தொழிற்சங்க இயக்கத்தில் பெரிதும் போற்றப்பட்ட, தூற்றவும்பட்ட தலைவர் ஓம்பிரகாஷ் குப்தா எல்லா கருத்து முரண்பாடுகளின் நாயகன். அனைத்து இணைப்புகளுக்கும், ஒற்றுமைக்கும், செயல்பாடுகளுக்கும் முன்னோடி. 1965 வரை வலதுசாரிகளால் வெளியார் (அரசு ஊழியர் அல்லாதவர்) என்று வசைபாடப்பட்டார். அவரது நிழலில் வளர்ந்த பலர் இயக்கத்தில் பிளவு ஏற்படுத்திய பின் கடுமையாகச் சாடினர். ஆனால் அவரது பங்களிப்பு யாராலும் மறுக்க இயலாதது.
தனது பெற்றோர் வழி தனக்குக் கிடைத்த பங்கை மூலதனமாக்கி, புதுடில்லில் “தாதா கோஷ் பவன்” தொழிற்சங்க தலைமையகத்தை உருவாக்கினார். எதிர்ப்புகளுக்கு இடையே சங்கத் தோழர்கள் நன்கொடை குவிந்தது. பல்வேறு பிரிவுகள் அடங்கிய தொலைபேசித் துறை ஊழியர்களின் முரண்பாடுகளை அரவணைத்து வெற்றி கொண்டார். அவசர கால நிலைக்குப் பின்உருவான அரசில் அமைச்சரான ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க இயலவில்லை. பின் சரண் சிங் அரசில் “மது தந்தவதே” யால் ரயில்வே ஊழியர்களுக்கு மட்டும் போனஸ் அறிவிக்கப்பட்டது. தோழர் குப்தா “போனஸ் பார் ஆல், போனஸ் பார் நன்” என்று தபால் தந்தி ஊழியருக்கும் மற்றையோருக்கும் போனஸ் பெற்றுத் தந்தார். 1984க்குப் பின் ரிசர்வுடு டிரைன்டு புல் என்று பணியமர்த்தப்பட்ட 3ம் பிரிவு ஊழியர்களையும் தற்காலிக ஊழியர்களாக நியமிக்கப்பட்ட கேசுவல் லேபர் ஊழியர்களையும் நிரந்தர ஊழியர்கள் ஆக்குவதில் பெரிதும் முனைந்து வெற்றி கண்டார். ராஜீவ் காந்தி பிரதமர் ஆனபின் தொலைபேசித் துறையில் புரட்சிகரமான மாறுதல்களை கொண்டுவந்த “சாம் பிட்ரோடா”வுடன் கலந்துரையாடி ஊழியர் நலன்களைப் பாதுகாத்தார். 1985ன்பின் தொலைப்பேசித் துறை நிறுவனமயமாக்கப்பட்டு பிஎஸ்என்எல் என்று மாற்றப்பட்டபோது அரசு ஊழியர் போன்றே ஓய்வூதியம் கிடைக்க உறுதி செய்தார். தொலைபேசித் துறை சங்கங்கள் பிளவுபட்ட பின்னர் ஒன்றிணைந்து வேலை நிறுத்தம் செய்தனர். பாரதீய ஜனதா தொழிற்சங்கம் மறுநாளே வேலை நிறுத்தத்தில் இருந்து விலகியது. எனினும் உடன்பாடு ஏற்பட்டபோது குப்தா அவர்களையும் இணைத்து ஒற்றுமை கண்டார். நெருக்கடியான நேரங்களில் என்எப்பிடிஇ பொதுச் செயலாளராகவும், கன்பிடரேட்டிவ் செயலாள ராகவும் செயல்பட்டார். உடன் பணியாற்றிய எனது நண்பர் “எ பிரண்ட் அண்ட எ கௌபிரேட்டர்” என்று உறவு கொண்டாடிய தோழர் கே.ராமமூர்த்தியின் தலைமையில் எப்என்பிடிஓ என்ற போட்டி சம்மேளனம் உருவானபோதும், அந்த சம்மேளனத்தோடு கூட்டு செயல்பாட்டில் இணைந்து பணியாற்றினார்.
நெடிது உயர்ந்த உருவம், குழந்தை போன்ற மலர்ந்த முகம் எப்போதும் உதடுகளில் தவழும் புன்னகை. அனைவரையும் அன்போடு அரவணைக்கும் பண்பாளர் ஓ.பி.குப்தாவுக்கு கோபம் வராது. வந்து விட்டால் ருத்ர தாண்டவம்தான்.
நேரு முதல் மன்மோகன் சிங் வரை, பல பிரதமர்களுடன் ரஃபி அகமத் கித்வாய் முதல் கபில் சிபில் வரையான துறை அமைச்சர்களுடன் தொழிலாளர் நலன் காக்க வாதாடியவர் தோழர் ஓ.பி. குப்தா.
முன்னணி தொழிற்சங்கத் தலைவர்கள், தோழர் எஸ்.ஏ.டாங்கே முதலான அரசியல் தலைவர்களுடன், இணைந்து பணியாற்றியவர் அவர். 66 ஆண்டுகள் இடையறாது தொழிற்சங்கப் பணியாற்றி தனது 92 வயதில் மறைந்த தோழர் ஓம்பிரகாஷ் குப்தாவின் நினைவு தொழிலாளர் நெஞ்சில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
தொடர்புக்கு: 24515977